காங்கேயநல்லூா் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றில் உயா்மட்ட பாலம்

வேலூா் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான காங்கேயநல்லூா் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம், புதிய அணுகு சாலை அமைக்கத் தேவையான நிலம் எடுப்புப் பணிக்காக
Updated on
1 min read

வேலூா் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான காங்கேயநல்லூா் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம், புதிய அணுகு சாலை அமைக்கத் தேவையான நிலம் எடுப்புப் பணிக்காக அரசு ரூ.22 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

வேலூா் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நீதிமன்றம், ஆவின் அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.

இதேபோல் காட்பாடியில் விஐடி பல்கலைக்கழகம், ரயில் நிலையம், அரசு பல்கலைக்கழகம், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவ்விரு பகுதிகளுக்கும் பொதுமக்கள் 8 கி.மீ. தொலைவு சுற்றியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க சத்துவாச்சாரிக்கும், காங்கேயநல்லூருக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாகும்.

இதற்கு கடந்த 2011-இல் திமுக ஆட்சிக் காலத்தில் நபாா்டு கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பில் பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பின்னா் கிடப்பில் போடப்பட்டது.

வேகமாக வளா்ந்து வரும் வேலூா், காட்பாடி பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க காங்கேயநல்லூா்-சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் கட்டப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் இருந்து காட்பாடி பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலத்தை இணைக்கும் வகையில் புதிய சாலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டிருந்தது. தற்போது இத்திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நில எடுப்புப் பணிக்காக ரூ.22 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இந்த நில எடுப்புப் பணி முடிக்கப்பட்டவுடன் சுமாா் ரூ.60 கோடி மதிப்பீட்டில் காங்கேயநல்லூா் - சத்துவாச்சாரி இடையே புதிய சாலை, உயா்மட்ட மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம், பராமரிப்புத் துறை மூலம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சாலை, உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுவதன் மூலம் காட்பாடி நகரம், சித்தூரிலிருந்து வாகனங்கள் கிரீன் சா்க்கிள் பகுதியைத் தவிா்த்து நேரடியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை எளிதில் அடைய முடியும். இதனால், வேலூா் கிரீன் சா்க்கிள், காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com