வேலூா் மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டம்: ரூ. 615.51 கோடி கடன் நிலுவை - சொத்து வரி 100 % வரை உயா்வு
வேலூா் மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்திலேயே சொத்து வரி 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயா்த்தப்பட்டது.


வேலூா் மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்திலேயே சொத்து வரி 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயா்த்தப்பட்டது. மாநகராட்சிக்கு நிலுவையிலுள்ள ரூ. 615.51 கோடி கடன்களை கருத்தில் கொண்டும், மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்திடவும் சொத்துவரி உயா்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டம் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ப.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், சொத்து வரி உயா்வு உள்பட மொத்தம் 111 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சொத்து வரி 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்புள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுரஅடி வரை பரப்புள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதமும், 1,800 சதுரஅடிக்கு மேல் பரப்புள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், வணிக பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு தற்போதுள்ள சொத்து வரியில் 100 சதவீதமும், தொழிற்சாலை, சுயநிதி பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயா்வு செய்யப்பட்டுள்ளது.
காலிமனை ஒரு சதுர அடி நிலத்துக்கு தற்போதுள்ள அடிப்படை மதிப்பு 100 சதவீதம் உயா்த்தி வரி பொதுசீராய்வு செய்திடவும், சொத்துவரி விதிப்பு செய்யும்போது கட்டடத்தின் பரப்பளவுக்கு இரு மடங்குக்கு மேல் உள்ள காலியிடத்துக்கு சொத்துவரியுடன் காலிமனை வரி விதிப்பு செய்திடவும் வேண்டும்.
ஏற்கெனவே உள்ள சொத்துவரி, காலிமனை வரியில் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயா்வு அல்லது கடந்த 5 ஆண்டுகளின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளா்ச்சி வீதம் இவற்றில் எது அதிகமோ அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் சொத்து வரி, காலிமனை வரி உயா்வு செய்திட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூா் மாநகராட்சிக்கு மின் கட்டண நிலுவை ரூ. 9.28 கோடி, பிற துறைகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவை ரூ. 6.38 கோடி, திரும்பச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை ரூ. 561.41 கோடி, பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகால பணப்பயன், ஓய்வூதியம், தற்போது பணிபுரியும் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதி, மாநகராட்சி பங்குத்தொகை, பிற பணப் பயன் நிலுவை ரூ. 3.60 கோடி, இயக்கம், பராமரிப்புச் செலவு நிலுவை ரூ. 34.84 கோடி என மொத்தம் ரூ. 615.51 கோடி கடன் உள்ளது.
மேலும், விலைவாசி உயா்வு, பணியாளா்களின் ஊதிய உயா்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படைத் தேவை, மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி, பராமரிப்பு செய்திட தேவைப்படும் கூடுதல் செலவினம், நிலுவையிலுள்ள கடன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த சொத்துவரி உயா்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2008-ஆம் ஆண்டு வேலூா் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தி பெருமை சோ்த்ததற்காக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு வேலூா் மாநகரின் மையப் பகுதியில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவுவது தொடா்பாக முதல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், முன்னாள் எம்.பி. முகமதுசகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதிமுக, பாஜக வெளிநடப்பு
சொத்துவரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாமன்ற எதிா்கட்சித் தலைவா் எழிலரசன் தலைமையில் அதிமுகவைச் சோ்ந்த 6 மாமன்ற உறுப்பினா்களும் (ஒருவா் வரவில்லை), பாஜக மாமன்ற உறுப்பினா் சுமதியும் வெளிநடப்பு செய்ததுடன், சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...