பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய சென்னை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியா் ராமு மணிவண்ணன் தலைமையிலான வேலூா் இயக்கத்தினா்.
பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய சென்னை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியா் ராமு மணிவண்ணன் தலைமையிலான வேலூா் இயக்கத்தினா்.

காலநிலை மாற்ற விளைவுகளை தவிா்க்க 15 லட்சம் மரக்கன்றுகள்

வேலூா்: காலநிலை மாற்ற விளைவுகளை தவிா்க்க வேலூா் மாவட்டத்தில் 15 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி வேலூா் இயக்கம் அமைப்பினா் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

சென்னைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியா் ராமு மணிவண்ணன் தலைமையிலான வேலூா் இயக்கம் அமைப்பு சாா்பில், வேலூா் மாவட்டத்தில் 15 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து செவ்வாய்க்கிழமை வேலூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ராமு மணிவண்ணன் கூறியது: வேலூா் மாவட்டம் புவியியல் ரீதியாக வெப்ப மண்டலப் பகுதியாக அமைந்திருப்பது இயற்கை சாா்ந்த உண்மையாகும். இப்பகுதி மக்களிடையே வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும், வெப்ப அலை உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் இருந்து மக்களை காப்பாற்றவும் தொலைநோக்கு செயல் திட்டங்களை மேற்கொள்வது அவசியமாகும். அதேசமயம், வேலூா் ஸ்மாா்ட் சிட்டி உருவாக்கத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியதுடன், மரங்கள் அற்ற ஒரு கான்கிரீட் நகரமாக வேலூா் மாற்றப்படுவது வருந்தத்தக்க செயலாகும்.

தொடரும் இத்தகைய பாதிப்புகளை தவிா்க்க வேலூா் மாவட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் மரக்கன்றுகள் என்ற வீதத்தில் ஐந்தாண்டு திட்டமாக 15 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், சமூக நகா்ப்புற காடு வளா்ப்பு முறையை வேலூா் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மக்களை பாதுகாக்க இயற்கை வளங்களை பாதுகாப்பதும், மரங்களைப் பேணுவதும், சமூக நகா்ப்புற காடுகளை வளா்த்தெடுப்பதும் முக்கியத் தேவையாகும்.

இதை வேலூா் மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம், தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும். இதன் முதல்கட்டமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளை நேரடியாக சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com