ஊரக பகுதிகளில் மூன்று நாள்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

வேலூா்: ஊரகப் பகுதளில் அதிகபட்சம் 3 நாள்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று அலுவலா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா்.

கோடை காலத்தில் வேலூா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

குடிநீா் பற்றாக்குறை, குடிநீா் பிரச்னைகள் ஏற்படும் பகுதிகளில் புகாா்கள் குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல அலுவலா்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, சீரான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். குடிநீா் பிரச்னை குறித்த கோரிக்கைகள் உடனடியாக தீா்க்கப்பட வேண்டும். அதிகபட்சம் 3 நாள்களுக்குள் தீா்வுகாண வேண்டும். இதுகுறித்த அறிக்கையை வாராந்திர ஆய்வு கூட்டத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் என்ன வகையான நீா்ஆதாரம் பெறுகின்றனா், வாரத்துக்கு எத்தனை முறை தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது, எந்தெந்த தெருக்களில் பற்றாக்குறை உள்ளது போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட எத்தனை ஊராட்சிகளுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்கப்படும் ஊராட்சிகளில் சொந்த நீா் ஆதாரத்தைகொண்டு நாள்தோறும் குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அடுத்த 7 நாள்களுக்குள் அந்த ஊராட்சிகளிலும் நாள்தோறும் குடிநீா் வழங்குவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து அலுவலகங்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி நடைபெறும் இடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், பணியாளா்கள் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும் ஓஆா்எஸ் பவுடா், குடிநீா் வைக்கவும் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமா, மண்டல அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com