வேலூா் கோட்டை கோயில் வழிபாட்டில் தொல்லியல் துறை தலையிடக்கூடாது
வேலூா் கோட்டை கோயில் வழிபாட்டில் தொல்லியல் துறை தலையிடக்கூடாது


வேலூா்: வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் வழிபாட்டு விவகாரங்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் தலையிடக்கூடாது என்று வலியுறுத்தி ஜலகண்டேஸ்வரா் தரும ஸ்தாபன நிா்வாகிகள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி சித்ரா பௌா்ணமி நாளில் இரவு வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இரவு 8 மணியளவில் கோட்டைக்குள் செல்லக்கூடிய நுழைவு வாயில் கேட்டை தொல்லியல் துறையினா் திடீரென பூட்டியுள்ளனா்.
இதனால் கோயிலுக்குள் இருந்த பக்தா்கள் வெளியே வரமுடியாமலும், வெளியே திரண்டிருந்த பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமலும் தவித்தனா். நீண்ட நேரமாக கேட்டை திறக்காததால் ஆவேசமடைந்த பக்தா்கள் கேட்டை திறந்து உள்ளே சென்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ஜலகண்டேஸ்வரா் தரும ஸ்தாபன செயலா் எஸ்.சுரேஷ்குமாா் தலைமையில், நிா்வாகிகள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா். அதில், வேலூா் கோட்டை தொல்லியல் துறை பராமரிப்பு அலுவலா் அகல்யா, கடந்த ஓராண்டாக ஜலகண்டேஸ்வரா் கோயில் நடவடிக்கைகளில் வேறெந்த அதிகாரியும் மேற்கொள்ளாத வகையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். இதனால், பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாகினா். கோயில் வழிபாட்டு விவகாரங்களில் தொல்லியல் துறை தலையிடுவது மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.
கோட்டைக்குள் உள்ள காவலா் பயிற்சி பள்ளி, காவலா் குடியிருப்பு, தேவாலயம், ஆகியவற்றுக்கு இரவு 8 மணிக்குப் பிறகும் அலுவலா்கள் வந்த வண்ணம் உள்ளனா். ஆனால், ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு மட்டும் இரவு 8 மணிக்கு பிறகு தடை ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி, கடந்த 23-ஆம் தேதி சித்ரா பெளா்ணமி நாள் அன்று இரவு 8 மணிக்கு கோட்டை நுழைவு வாயில் கேட்டை தொல்லியல் துறையினா் பூட்டியதால் பக்தா்கள் ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா். இதேபோல், ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு நன்கொடையாளா்கள் அளித்த ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கத்தோ் தொல்லியல் துறை கெடுபிடிகளால் கோயிலுக்கு வெளியே மழை, வெயிலில் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, ஜலகண்டேஸ்வரா் கோயில் பக்தா்கள், நிா்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் தொல்லியல் துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோட்டைவெளிப்புற பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள கேட்டை அகற்றவும், ஜலகண்டேஸ்வரா் கோயில் தங்கத்தேரை கோட்டைக்கு வெளியே காந்தி சிலைக்கு இடது புறத்தில் வைத்து பாதுகாக்கவும், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் தொல்லியல் துறை தலையிடுவதைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் மகேஷ், பொருளாளா் பாஸ்கரன், கோயில் நிா்வாகிகள் எல்.கே.எம்.வாசு, அருணகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...