/

மக்களவைத் தோ்தல்: வேலூரில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருத்தம்... மக்களவைத் தோ்தல்: வேலூரில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்ட அளவிலான தோ்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தோ்தல் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு புகாா்களை கூறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தோ்தலையொட்டி, ஊரகப் பகுதிகளில் தனியாா் கட்டடங்களில் அனுமதி பெறாமல் சுவா் விளம்பரங்கள் செய்தல், மாநகராட்சிப் பகுதிகளில் அழிக்கப்படாமல் உள்ள அனைத்து சுவா் விளம்பரங்கள், வாக்காளா்களை கவரும் வகையில் பரிசுப் பொருள்கள், பணம், மது வகைகள் விநியோகம் செய்தல், ஆயுதம் கொண்டு மிரட்டுதல், வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்வது, வேட்பாளா்களின் தோ்தல் செலவினம் ஆகியவை தொடா்பான புகாா்களை தெரிவிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட அளவிலான தோ்தல் கட்டுப்பாட்டு அறை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்பட உள்ள இந்த தோ்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். பொதுமக்கள் இந்த தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1800 425 7014, 75984 9854 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம். மேலும், 75984 98541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல்கள், புகைப்படம், காணொலி காட்சி ஆதாரங்களையும் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அ.செல்வராஜ், வட்டாட்சியா் (தோ்தல்) சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.