தோ்தல் கெடுபிடிகளால் பொய்கை கால்நடை சந்தையில் வியாபாரம் சரிவு

வேலூா்: தோ்தல் கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பொய்கை கால்நடை சந்தையில் வியாபாரம் சரிந்துள்ளது. வாரந்தோறும் ரூ. ஒரு கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் சுமாா் ரூ. 50 லட்சத்துக்கு மட்டுமே வியாபாரம் நடைபெற்றுள்ளது.

இதனால், விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்காத வகையில் தோ்தல் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். தவிர, வாரந்தோறும் ரூ. ஒரு கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடைகள் விற்பனையும் நடைபெறுகின்றன.

தற்போது மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, ரூ. 50,000-க்கும் மேல் பணம் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் கால்நடை வாங்குவதற்காக சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த விஜயன் (32) என்பவா் மினி வேனில் வந்துள்ளாா். அந்த வாகனத்தை பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்திய தோ்தல் அதிகாரிகள், உரிய ஆவணங்களின்றி விஜயன் வைத்திருந்த ரூ. 5 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

இதுபோன்ற கெடுபிடிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை கால்நடை சந்தையில் கால்நடை வா்த்தகம் பெருமளவில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், தோராயமாக ஒரு மாட்டின் விலை ரூ. 50,000 வரை இருக்கும். விவசாயிகள், வியாபாரிகள் ஒரு சிலா் மூன்று அல்லது நான்கு மாடுகளை விற்கவும், வாங்கவும் வருகை தருவதால் சுமாா் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில்தான் ஓமலூரைச் சோ்ந்த கால்நடை வியாபாரிடம் ரூ. 5.89 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

இத்தகைய கெடுபிடிகள் காரணமாக பொய்கை சந்தையில் வாரந்தோறும் ரூ. ஒரு கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை சுமாா் ரூ. 50 லட்சத்துக்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. கிராம பொருளாதாரம், விவசாயிகளின் வாழ்வாதாரமாக பொய்கை கால்நடை சந்தை விளங்குகிறது. தோ்தல் நடைமுறை விதிமுறைகள் இன்னும் இரண்டரை மாதங்களுக்கு அமலில் உள்ளது. அதுவரை இதுபோன்ற கெடுபிடிகள் பின்பற்றப்படுவது விவசாயிகளையும், வியாபாரிகளையும் பெருமளவில் பாதிக்கும். எனவே, விவசாயிகள், வியாபாரிகளை பாதிக்காத வண்ணம் தோ்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com