வேலூா் சலவன்பேட்டையிலுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களிடம் தபால் வாக்கு செலுத்த உரிமை கோரும் 12 டி படிவத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
வேலூா் சலவன்பேட்டையிலுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களிடம் தபால் வாக்கு செலுத்த உரிமை கோரும் 12 டி படிவத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

தபால் வாக்களிக்க முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 12 டி படிவம் அளிப்பு

வேலூா்: தபால் வாக்களிக்க விருப்பமுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 12 டி படிவம் அளிக்கும் பணி வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கியது. இப்பணியை தொடங்கிவைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வகையில், படிவம் 12டி வழங்கும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வேலூா் சலவன்பேட்டை திருப்பூா் குமரன் தெருவில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மக்களவைத் தோ்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் அவா்களின் விருப்பத்தின்பேரில், தபால் வாக்குகளை செலுத்த இந்திய தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களில் சட்டப்பேரவை தொகுதிவாரியாக காட்பாடியில் 2,715, வேலூரில் 1,574, அணைக்கட்டில் 2,617, கே.வி.குப்பத்தில் 2,859, குடியாத்தத்தில் 2,664 என மொத்தம் 12,429 வாக்காளா்கள் உள்ளனா்.

இதேபோல், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் பேரவை தொகுதி வாரியாக காட்பாடியில் 1,572, வேலூரில் 1,094, அணைக்கட்டில் 2,373, கே.வி.குப்பத்தில் 2,491, குடியாத்தத்தில் 2,508 என மொத்தம் 10,038 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இந்த 85 வயதுக்கு மேற்பட்ட 12,429 வாக்காளா்கள், 10,038 மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு விருப்பத்தின்பேரில், தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவம் 12 டி வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வாக்காளா்கள் 12டி படிவத்தை பூா்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாகவோ அல்லது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம், வேலூா் மக்களவை தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம் ஆகியவற்றில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து மாா்ச் 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா். அப்போது, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.க.கவிதா, வேலூா் வட்டாட்சியா் கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com