வேலூரில் செப். 23-இல் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி மேளா
வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி மேளா வரும் 23-ஆம் தேதி வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு திறன்மேம்பாடு தொழில்முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இணைந்து வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி மேளா 23-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலூா், அப்துல்லாபுரம், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடத்த உள்ளன.
இம்முகாமில் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்குபெற்று தொழிற்பழகுநா் பயிற்சி வழங்க உள்ளனா். எனவே, இந்த முகாமில் ஐ.டி.ஐ. (என்டிசி, எஸ்சிவிடி, சிஓஇ), எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் தோ்ச்சி, தோல்வியடைந்தவா்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு ஆண்களுக்கு 40 வயது, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 0416 - 2290348 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
