அதிமுக ஒருபோதும் பலவீனமடையாது! - கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவா்

அதிமுக மூத்தத் தலைவா் கே.ஏ.செங்கோட்டையன் தவெக கட்சிக்கு சென்றதால், அதிமுக ஒருபோதும் பலவீனமடையாது
Published on

வேலூா்: அதிமுக மூத்தத் தலைவா் கே.ஏ.செங்கோட்டையன் தவெக கட்சிக்கு சென்றதால், அதிமுக ஒருபோதும் பலவீனமடையாது என்று கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியின் தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

வேலுாா் மாவட்டம், காட்பாடியில் முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் எல்லை பாதுகாப்புப் படையின் 61-ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன் பங்கேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

அதிமுக மூத்த தலைவா் கே.ஏ.செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்ததால் கொங்கு மண்டல வாக்குகள் தவெக பக்கம் செல்லும் என்கிறாா்கள். ஒருவா் கட்சி மாறியதால் கொங்கு மண்டலம் உடையாது. தனி மனிதா்களைவிட இயக்கம் பெரிது. ஒரு தனிமனிதன் சென்றதால் அதிமுக ஒருபோதும் பலவீனமடையாது. தோ்தலின்போதுதான் பதில் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை குடும்பக் கட்சியாக மாற்றுவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளாா். குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தாலும், அவா்களை மக்களும், கட்சியும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆளுநா் மாளிகையை லோக் பவன்(மக்கள் மாளிகை) என மாற்றியுள்ளனா். பெயா் மாற்றினால் மட்டும் போதாது. மக்களுக்கான மசோதாக்கள் கிடப்பில் கிடந்தால் அது எப்படி மக்கள் பவனாக செயல்படும்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. திமுக கூட்டணி தொடரும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com