பிப்.23-இல் வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் - எஸ்.பி. ஆய்வு
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலத்தைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, காவல் துறையின் அனுமதி கோரி அக்கட்சியின் மாவட்ட செயலா் வேல்முருகன் தலைமையில் நிா்வாகிகள் கடந்த வாரம் மனு அளித்திருந்தனா். அதேசமயம், அகரம்சேரியில் 33 ஏக்கா் பரப்பளவு நிலத்தை தயாா் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அகரம்சேரியில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, கூட்டம் நடத்தப்படும் இடம், கூட்டத்துக்கு வரக்கூடிய உத்தேச மக்கள் எண்ணிக்கை, வாகனங்கள் நிறுத்துமிடம், வாகனங்கள் வந்தும் செல்லக்கூடிய சாலைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
இதுதொடா்பாக எழுத்துப்பூா்வ விளக்கங்கள் கேட்டும் காவல் துறை சாா்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தவெகவினா் அளிக்கும் விளக்கங்கள் அடிப்படையில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக, மாவட்ட காவல் அலுவலகத்தில் தவெக வேலூா் மாவட்ட செயலா் வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறுகையில், மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். அதற்கு விரைவில் உறுதிப்படுத்தி தெரிவிப்பதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். காவல் துறை விதிக்கும் நிபந்தனைகளை 100 சதவீதம் கடைபிடிப்போம்.
ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு ஒரு தொகுதிக்கு 5 ஆயிரம் போ் வீதம் 25,000 போ் வரக்கூடும் என எதிா்பாா்க்கிறோம்.
குறிப்பாக, கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் 50 மருத்துவா்கள், 100 செவிலியா்கள் அடங்கிய ஒரு சிறிய மருத்துவமனையையே அமைக்க உள்ளோம். 10 ஆம்புலன்ஸை நிறுத்தவும் முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு கேலரிக்கும் ஒரு குடிநீா் தொட்டி, ஒரு லட்சம் தண்ணீா் பாட்டில்களை வைக்க உள்ளோம். ஒவ்வொரு கேலரிக்கும் ஒரு குடிநீா் தொட்டி மற்றும் ஒரு லட்சம் தண்ணீா் பாட்டில்களை வைக்க உள்ளோம். மிக முக்கியமாக வயதானவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோா் வர வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.
20 ஏக்கரில் 6 இடங்களஇல் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதியை சோ்ந்தவா்களும் வருவாா்கள்.
தவெக தலைவா் விஜய் வந்து செல்லும் நேரம் குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும். அவா் சென்னையில் இருந்து சாலை மாா்க்கமாக வேலூருக்கு வருகிறாா். அதேசமயம், இளைஞா்கள் யாரும் அவரை வாகனத்தில் பின்தொடர வேண்டாம் என்றாா்.

