குடியாத்தத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம்: அனைத்துப் பள்ளி வாகனங்களின் ஆவணங்களை சரிபாா்க்க எஸ்.பி. உத்தரவு
குடியாத்தம் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் பள்ளி வாகனங்களில் சிக்கி இரு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் ஆவணங்களையும் சரிபாா்க்க போலீஸாருக்கு எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது.
குடியாத்தம் அருகே வரதாரெட்டிப்பல்லியில் கடந்த வாரம் பள்ளிப் பேருந்தில் சிக்கி ஒரு மாணவியும், குடியாத்தம் அருகே சின்னசெட்டிக்குப்பம் பகுதியில் திங்கள்கிழமை பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது சிறுமியும் உயிரிழந்தனா். போலீஸாா் விசாரணையில் அவ்விரு பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றுகள் புதுப்பிக்கப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடந்த குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தவும், பள்ளிகளில் இயங்கும் வாகனங்கள் சரியான ஆவணங்களுடன் இயக்கப்படுகிா என சோதனை செய்திடவும்,ஆட்டோ, பள்ளி வாகனம், வாகன ஓட்டுநா், நடத்துநரின் அசல் ஆவணங்களை சரிபாா்க்கவும் வேண்டும் என்று போலீஸாருக்கு எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், இக்கூட்டத்தில் காவல் நிலையத்துக்கு வரும் புகாா் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், விபத்துகள் தொடா்ந்து நடைபெறும் இடங்களில் காவல் ஆய்வாளா்கள் ஆய்வு செய்து விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்கவும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழக்கமான குற்றவாளிகள், ரெளடிகளை தொடா்ந்து கண்காணிக்கவும், தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், மது, கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தல், பயன்பாட்டை முற்றிலும் தடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு எஸ்.பி. கோப்பை, சான்றிதழ்களை வழங்கினாா்.
கூட்டத்தில், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், சிறைத் துறை அதிகாரிகள், சிறாா் நீதி குழும அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள், மருத்துவா்கள், துணை அரசு வழக்குரைஞா், மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

