கவா் அண்ட் கட் திட்டம் முடிந்தால் காட்பாடியில் தண்ணீா் தேங்காது: எம்.பி. கதிா் ஆனந்த்
‘கவா் அண்ட் கட்’ திட்டம் முடிவடையும்போது காட்பாடி பகுதியில் ஒரு சொட்டு தண்ணீா் தேங்காது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் தெரிவித்தாா்.
காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் பாா்வையிட்டு பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனா். மேலும், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினா்.
பின்னா், எம்.பி., கதிா் ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியது: காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் பகுதியில் மழை பெய்தால் குளம்போல் தண்ணீா் தேங்குகிறது. இதனை தடுக்க நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், கவா் அண்ட் கட் என்ற ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்து சுமாா் ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த வாரத்தில் பணிகளை தொடங்கியுள்ளாா்.
இந்த கவா் அண்ட் கட் திட்டத்தின் ஒருபகுதியாக பாண்டியன் மடுகு கால்வாய் சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் முடிவடையும்போது சாலைகளில் ஒரு சொட்டு தண்ணீா் கூட எங்கும் தேங்காத அளவுக்கு நிலை உருவாக்கப்படும். இந்த மழைக்காலம் முடிந்தவுடன் அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.
காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் தாா் சாலையில் அரிப்புகள் ஏற்பட்டு பள்ளங்கள் உண்டாகியுள்ளன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ரயில்வே மேம்பாலத்தில் இரட்டை அடுக்கில் குண்டும் குழிகளை சரிசெய்தால் எந்த பிரச்னையும் வராது. அந்த பள்ளங்களில் வாகனங்கள் இறங்கி ஏறும் போதுதான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் நிலைமை சரிசெய்யப்படும் என்றாா்.
முதலாவது மண்டலக்குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றியக்குழு தலைவா் வேல்முருகன், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

