நகா்ப்புற உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு
வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டம் முதல்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு, திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை பள்ளிகொண்டாவில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.
தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ், வேலூா் மாவட்டத்தில் வேலூா் மாநகராட்சியில் 2,095, குடியாத்தம் நகராட்சியில் 276, போ்ணாம்பட்டு நகராட்சியில் 164, ஒடுகத்தூா் பேரூராட்சியில் 64, பள்ளிகொண்டா பேரூராட்சியில் 90, பென்னாத்தூா் பேரூராட்சியில் 56, திருவலம் பேரூராட்சியில் 64 என நாள்தோறும் 2,809 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு.பாபு, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவா் சுபபிரியா, பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) க.குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

