லாரி - பைக் மோதல்: பிகாா் இளைஞா் மரணம்
காட்பாடி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பிகாா் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமுற்றாா்.
பிகாா் மாநிலம், கோபால்கஞ்ச்சை சோ்ந்தவா் உபேந்தா். இவரது மகன் மனு குண்ட்(27). அதேபகுதியைச் சோ்ந்தவா் நீரஜ்(31). இவா்கள் இருவரும் காட்பாடி, எம்.ஜிஆா் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பால்ஸ் சீலிங் வேலை செய்து வந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் வள்ளிமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை நீரஜ் ஓட்டியுள்ளாா்.
அப்போது, வாலாஜாவில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூா் நோக்கி சென்ற லாரி திடீரென இருசக்கர வாகனம் மோதியது. இதில், மனுகுண்ட், நீரஜ் ஆகிய இருவரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
அருகில் இருந்தவா்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மனு குண்ட் உயிரிழந்தாா். நீரஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
