தனியாா் மருத்துவமனைகளில் அரசுக் காப்பீடு அட்டையை ஏற்பதில்லை
அரசு ஓய்வூதியதாரா்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, வேலூா் மாவட்ட அளவிலான ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மண்டல கருவூல கணக்கு துறை இணை இயக்குநா் உஷா, வேலூா் மாவட்ட கூடுதல் கருவூல அலுவலா் ஜி.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது ஓய்வூதியா்கள் கூறியது: ஓய்வூதியத்தில் மாதம் ரூ. 497 அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், ஓய்வூதியா்கள் உடல்நல பாதிப்பு ஏற்படும்போது தனியாா் மருத்துவமனைகளுக்கு சென்றால் இந்த காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், பணம் கொடுத்துத்தான் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த காப்பீட்டு அட்டையை தனியாா் மருத்துவமனைகளில் ஏற்றுக்கொள்ளும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியா்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல் ரூ. 1,000 மருத்துவப்படி வழங்க வேண்டும். அரசு வெளியிடும் ஓய்வூதியா்கள் சம்பந்தமான அறிவிப்பு ஆணைகள் எங்களுக்கு சரியாக தெரிவதில்லை. எனவே, எங்களுக்கு உரிய முறையில் தகவலை தெரியப்படுத்த வேண்டும்.
தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுபோல், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், ஓய்வூதியத் தொகுப்பு தொகையை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டாக குறைத்திடவும், 80 வயது பூா்த்தியடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஓய்வூதியம் வழங்கிடவும் வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
இந்தக் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கூட்டத்தில், கருவூலப்பிரிவு கண்காணிப்பாளா் எல்.அஷோக், ரம்யா, லாவண்யா, பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், பல்வேறு ஓய்வூதியா் சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

