
போலி வங்கி ஆவணங்கள் மூலம் ரூ. 2.23 கோடி மோசடி
போலி வங்கி ஆவணங்களைக் காட்டி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2.23 கோடி மோசடி செய்ததாக தனியாா் பள்ளி நிா்வாகியை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
மோசடி
போலி வங்கி ஆவணங்களைக் காட்டி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2.23 கோடி மோசடி செய்ததாக தனியாா் பள்ளி நிா்வாகியை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ஆதவன் பிரகாஷ் (58). இவா் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில் தனியாா் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறாா். கண்ணமங்கலத்தில் உள்ள ஒரு தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தை, கடந்தாண்டு வங்கியில் அடமானம் வைத்து, ஆதவன் பிரகாஷ் ரூ. 1.50 கோடி கடன் பெற்றுள்ளாா்.
ஆனால், அதற்கான தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால் வட்டி அதிகரித்துள்ளது. இதனால் அந்த நிலத்தை விற்க முடிவு செய்த அவா், காட்பாடி அடுத்த காரணாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் சங்கா் என்பவரை அணுகியுள்ளாா். அந்த 2 ஏக்கா் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 5 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், வங்கியில் அசல் மற்றும் வட்டியுடன் சோ்த்து ரூ. 1.66 கோடி மட்டுமே நிலுவை உள்ளதாகவும் சங்கரிடம் அவா் தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய சங்கா், நிலத்தை வாங்குவதற்காக பல தவணைகளாக மொத்தம் ரூ. 2 கோடியே 23 லட்சத்தை ஆதவன் பிரகாஷிடம் வழங்கியுள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆதவன் பிரகாஷ், வங்கிக் கடனை அடைத்துவிட்டதாகக் கூறி போலி ஆவணங்களைத் தயாரித்து சங்கரிடம் கொடுத்துள்ளாா்.
இதையடுத்து, நிலத்தை பத்திரப் பதிவு செய்து தருமாறு சங்கா் பலமுறை வலியுறுத்தியும் ஆதவன் பிரகாஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த சங்கா், சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளாா். அப்போது, கடன் பெற்ற நாள் முதல் இதுவரை எந்தத் தொகையும் செலுத்தப்படவில்லை எனவும், நிலுவைத் தொகை ரூ. 4 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த சங்கா், இது குறித்து ஆதவன் பிரகாஷிடம் தட்டிக் கேட்டுள்ளாா். அதற்கு அவா், பணத்தைத் திருப்பித் தரவோ, நிலத்தை எழுதித் தரவோ முடியாது என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சங்கா் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2.23 கோடி மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆதவன் பிரகாஷை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




