சாக்கடையாய் மாறிப்போன சரபங்கா நதி
ஓமலூர், ஆக.6: ஓமலூர் என பெயர் வரக்காரணமாக இருந்த சரபங்கா நதி தன்னுடைய அடையாளங்களை முற்றிலுமாக இழந்து சாக்கடையாய் காட்சியளிக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்


ஓமலூர், ஆக.6: ஓமலூர் என பெயர் வரக்காரணமாக இருந்த சரபங்கா நதி தன்னுடைய அடையாளங்களை முற்றிலுமாக இழந்து சாக்கடையாய் காட்சியளிக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஏற்காட்டிற்கு மேற்குத் திசையில் அமைந்துள்ளது ஓமலூர் வட்டம். ஏற்காட்டில் உருவாகும் காட்டாறுகள் ஒன்றிணைந்து டேனிஷ்பேட்டை அடிவாரத்தை வந்தடைகிறது. அங்கிருந்து பெருகும் நீர் சரபங்கா நதியாக உருவெடுக்கிறது. அங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட எரிகள் மற்றும் கிராமங்களை வளப்படுத்தும் சரபங்கா நதி 20 கிமீ பயணித்து ஓமலூரை சென்றடையும்போது கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிகிறது. ஊரைச் சுற்றிலும் ஓம்கார வடிவில் சரபங்கா நதி சுற்றி வருவதாலும்,இந்த நதிக்கரையில் பண்டைய காலத்தில் ஹோமங்கள் அதிக அளவில் நடைபெற்றதாலும் ஓமலூர் என்ற பெயரில் இப்பகுதி அழைக்கப்பட்டு வருகிறது.
ஓமலூர்,காடையாம்பட்டி,தாரமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஐந்து பேரூராட்சிகள் உள்ளடக்கிய இன்றைய ஓமலூர் வட்டத்தில் முக்கியமான நீர் ஆதாரமாக சரபங்கா நதியே திகழ்ந்து வந்தது. ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்து நீர் வரும் பாதை மெல்ல மெல்ல ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது முதலே சரபங்கா நதியில் நீர்வரத்தும் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் வழியோர கிராமங்களின் ஏரிகளுக்கும் நீர் கிடைக்காததால் அவை தூர்ந்து போனதோடு பாசனப் பரப்பளவும் தற்போது குறைந்து விட்டன.
வழக்கமாக தென்மேற்குப் பருவமழை காலத்தில் காட்டாறு போல ஓடும் சரபங்கா நதியில் தற்போது சாக்கடை ஓடுவதைப் பார்த்து மக்கள் மனம் வருந்துகின்றனர்.
ஏற்காடு மலை அடிவாரமான டேனிஷ்பேட்டையில் தொடங்கி தின்னப்பட்டி, நாலுகால்பாலம்,காமலாபுரம்,மேட்டுப்பட்டி,அண்ணாநகர் வழியாக பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே வரை நீர்வழிப்பாதை ஆங்காங்கே ஆக்ரமிப்பாளர்களின் பிடிக்குள் போய்க்கொண்டுள்ளது.
இதேபோன்று கஞ்சநாயக்கன்பட்டி,தாராபுரம்,பல்பாக்கி, காமாண்டப்பட்டி ஆகிய கிராமங்களின் வழியாகச் செல்லும் மேற்கு சரபங்கா நதியும் தற்போதைய ஆடிப் பருவத்தில் காய்ந்து கட்டாந்தரையாய் கிடக்கிறது.
இரு நதிகளும் இணையும் இடமான கோட்டைமாரியம்மன் கோவில் பகுதியில் மட்டுமே தடுப்பணை காரணமாக சிறிதளவு நீர் தேங்கியுள்ளது.
ஏற்காட்டில் தொடங்கி ஓமலூர்,தாரமங்கலம்,கொங்கணாபுரம் வழியாக 60 கிமீ தூரத்திற்கு பாய்ந்து விவசாய நிலங்களை வளப்படுத்தி பின்னர் எடப்பாடி வழியாக காவிரி ஆற்றில் இணையும் வகையில் அமைந்த சரபங்கா நதியின் நீர்வழிப் பாதையை மீட்டுத்தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கியமான கோரிக்கை.
இந்த நீர்வழிப் பாதை சீரமைக்கப்பட்டால் 150-க்கும் மேற்பட்ட ஏரிகள் மறு சீரமைக்கப்படும் என்பதோடு பாசனப் பரப்பளவும் பெருகவும் வாய்ப்புள்ளது. கிணற்று நீரைத்தவிர வேறெந்த நீர் ஆதாரமும் இன்றி தவிக்கும் ஓமலூர் பகுதி விவசாயிகளின் கவலையைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...