காத்திருப்பில் கல்விக் கண் திறப்போர்!

ஈரோடு, ஜூன் 2:   தமிழகத்தில் கல்வியியல் (பி.எட்.,) பட்டம் பெற்றுள்ள சுமார் 3.5 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கின்றனர். கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படவில்லையெனில் பட்டதாரி ஆசிரியர
Updated on
2 min read

ஈரோடு, ஜூன் 2:   தமிழகத்தில் கல்வியியல் (பி.எட்.,) பட்டம் பெற்றுள்ள சுமார் 3.5 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கின்றனர். கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படவில்லையெனில் பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்காலம் 10  ஆண்டுகளுக்குள்ளேயே சுருங்கிவிடும்.   

  பட்டப்படிப்பு முடிப்பவர்களில் பெரும்பாலனவர்களின் தேர்வு கல்வியியல் (பி.எட்.,) படிப்பில் சேருவதுதான். இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆசிரியர் பணியில் மீதுள்ள ஆர்வமும், வேலை உறுதியுமே இதற்கு முக்கிய காரணம். பி.எட் முடித்துள்ளவர்களிடம்  இந்த மனநிலை அண்மைக்காலமாக முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 2003-ம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தில் ஒற்றை இலக்கத்திலேயே பி.எட் கல்லூரிகள் இருந்தன. இதனால் அப்போது பல்கலைக்கழங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட் பட்டம் அளித்தன. இதன் மூலம் கடந்த 2003-ம் ஆண்டுவரை பி.எட் படித்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் குறைவு.

  2003-ம் ஆண்டுக்குப்பிறகு தமிழகத்தில் தனியார் பி.எட் கல்லூரிகள் தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி அளித்தது. ஆசிரியர் பணி நியமனத்தில் அரசு கடைபிடித்துவரும் நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்ட பலர், தங்களுக்கு அரசு வேலை எளிதில் கிடைத்துவிடும் என்று கருதி லட்சக்கணக்கில் செலவு செய்து இப்படிப்பில் சேர்ந்தனர். இதனால் 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என தமிழகத்தில் 645 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

 ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஆண்டுக்கு 100 மாணவர்கள் பி.எட் முடித்து வெளியேறுகின்றனர். இதன் மூலம் கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் பி.எட் முடித்துவிட்டு அரசுப் பணிக்கு காத்திருக்கின்றனர். பி.எட் முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சம் என்று வேலைவாய்ப்புத்துறையின் புளளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

÷தற்போதுள்ள நிலையில் ஆங்கில இலக்கியம், கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் கடந்த 2009-ம் ஆண்டில் பி.எட் முடித்துள்ளவர்களுக்கு கூட 6 ஆண்டுகளில் அரசுப் பணிக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பிற பாடப் பிரிவுகளில் பி.எட் முடித்துள்ளவர்களில் பெரும்பாலோனோர் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதில்தான் அரசுப் பணி கிடைக்கும். ஒரு சில பாடப் பிரிவுகளுக்கு 1990-ல் பதிவு செய்துள்ளவர்களும் அரசுப் பணிக்காக இன்னும் காத்திருக்கின்றனர்.

  படித்த அனைவருக்கும் அரசு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க முடியாது. பி.எட் முடித்தவர்களுக்கு தனியார் பள்ளிகள், வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் பணி, சுயமாக தனிப்பயிற்சி கல்லூரி தொடங்குதல் போன்ற வாய்ப்புகள் உள்ளன.  வெளிநாடுகளில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.  தமிழகத்திலும் இதே நடைமுறையை பின்பற்றப்படவேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார் தனியார் பி.எட் கல்லூரி முதல்வர் ஒருவர்.   

÷இது குறித்து கல்வித்துறை உயரதிகாரி தெரிவித்தது: தனியார் பள்ளிகளில் குறைவான ஊதியம் கொடுக்கப்படுவதால்தான், ஆசிரியர்களிடம் அரசுப் பணி எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் குறைந்தபட்சம் 75 சதமாவது தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தரமான கல்வியை அளிக்கும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கவுரமான  ஊதியம் கிடைத்திட, தனியார் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.          

÷இதன் மூலம் தனியார் பள்ளிகளில் அரசின் கட்டுப்பாடுகளை அதிகரித்திடவும், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைத்திடவும், ஆசிரியர் பணிக்கான தகுதிகளை பெற்றுள்ளவர்கள் வேலைக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலையும் மாறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com