மனிதவளம் இன்றித் தவிக்கும் விவசாயிகள்!

ஈரோடு, ஜூன் 17: விவசாய வேலைகளை உரிய காலத்தில் செய்யப் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாற்று விடுது, நடவு செய்வது, அறுவடை உள்ளிட்ட அனைத்து விவசாய வேலைக
Updated on
2 min read

ஈரோடு, ஜூன் 17: விவசாய வேலைகளை உரிய காலத்தில் செய்யப் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாற்று விடுது, நடவு செய்வது, அறுவடை உள்ளிட்ட அனைத்து விவசாய வேலைகளிலும் மனித உழைப்பே பிரதானம். ஆனால் விவசாய தொழிலாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

விவசாய வேலைகள் சிலவற்றுக்கு இயந்திரங்கள் வந்து விட்டன.  ஆனால் அனைத்து  வேலைகளையும் இயந்திரங்களால் செய்ய முடியாது.  பாரம்பரிய விவசாயத்தில் இருந்து மாறுபட்டிருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளவும், பயன்படுத்தவும் விவசாயிகளிடையே தயக்கம் இருக்கிறது.

உழவு, அறுவடைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், அனைத்து நிலங்களிலும் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. பல்வேறு காரணங்களால் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள விவசாயிகள், மனித உழைப்பையே நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். நெல் அல்லாத கரும்பு, காய்கறி, பூ போன்ற மற்ற விவசாயத்தைப் பொறுத்தவரை அதில் இயந்திரங்களைப் பயன்படுத்த சாத்தியமே இல்லை. மனித உழைப்பு மூலம் செய்யப்பட வேண்டிய விவசாய வேலைகள், தொழிலாளர் பற்றாக்குறையால் குறித்த காலத்தில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள், கரும்பு வெட்டுவதற்கு வட மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 2 சதவீத விவசாயத் தொழிலாளர்கள்,  கட்டட மற்றும் சாயப்பட்டறைப் பணிகளுக்கு இடம்பெயர்வதாக விவசாய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விவசாயத்தை விட கூடுதல் கூலி, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் போன்றவற்றால் இத்தகைய வேலைகளுக்கு மாறும் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கூலித் தொழிலாளர் பிரச்னைக்கு இன்னொரு முக்கியக் காரணம், அரசின் 100 நாள் வேலைத் திட்டம் கிராமங்களில் இருக்கும் ஒரு சில விவசாயத் தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக, பெண்கள் அதிகளவில் இந்தத் திட்டத்தில் வேலைக்குச் செல்கின்றனர். விவசாய வேலையில் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு கூலியும், அதிக வேலை நேரமுமே அவர்களை அங்கு திருப்பி விட்டிருக்கிறது.

"100 நாள் வேலை திட்டத்தை விவசாயப் பணிகளுக்குப் பயன்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இத்திட்டத்தில் கீழ் அரசு வழங்கும் கூலியில் பாதித் தொகையை அரசு வழங்கினால், மீதியை தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் விவசாயிகள் வழங்கத் தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் விவசாயத்திற்கு தொழிலாளர் பற்றாக்குறை நீங்குவதுடன் அரசுக்கும், விவசாயிகளுக்கும் பொருளாதார ரீதியாக சிக்கனம் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று விவசாயத் தொழிலாளர் நலவாரிய தலைவர் கு.செல்லமுத்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க செயலர் தளபதி கூறியது: வேலை உறுதித் திட்டப் பணிகளுக்குச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் கூலி முழுவதுமாக பயனாளிகளைச் சென்றடைவதில்லை. இதனால் பல இடங்களில் பிரச்னைகள் ஏற்படுகிறது. இத் திட்டத்தின் பயன் விவசாயத்திற்குச் செல்லும்போது விவசாய உற்பத்தி பெருகுவதோடு, விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வருவாயும் கிடைக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com