லம், செப். 18: சேலத்தில் உறுப்பு தானமாக இதயத்தைப் பெற்ற இளம்பெண், தனக்கு மறு வாழ்வு அளித்த மாணவரின் முதலாவது நினைவு நாளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
÷ சேலம்-திருச்சி மெயின் ரோடு ரஞ்சித் தெருவைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி நந்தீஷ்குமார் (47). இவரது மனைவி நாகபுஷ்பம் (40). இவர்களது மகன் சபரீஷ் (19). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த 2009 செப்டம்பர் 13-ம் தேதி நண்பருடன் பைக்கில் ஏற்காடுக்கு செல்லும்போது எதிரே வந்த கார் மோதி சபரீஷ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ÷ அங்கு போதிய வசதிகள் இல்லை என்பதால் மருத்துவர்களின் பரிந்துரையின்படி சீரகாபாடியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு 3 நாள்கள் உயிருக்குப் போராடிய சபரீஷின் நாடித்துடிப்பு செப்டம்பர் 16-ம் தேதி காலையில் குறையத் தொடங்கியது. இனியும் உயிர் பிழைப்பது கடினம் என்று டாக்டர் கூறிய நேரத்தில், தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார் நந்தீஷ்குமார். சென்னையில் உறுப்பு தானம்: இதையடுத்து, தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சபரீஷின் உடலில் இருந்து செப்டம்பர் 17-ம் தேதி இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இதையடுத்து அவரது உடல் சேலம் கொண்டு வரப்பட்டு 18-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. சபரீஷின் முதலாண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. ஆனந்தக் கண்ணீர் : பெற்றோரும், உறவினரும் அவரை நினைவு கூர்ந்து கண்ணீரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் தனது பெற்றோர் நாகராஜன் - விஜயாவுடன் அஞ்சலி செலுத்த வந்தார் அபிநயா (23). திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா வெண்ணவாசலைச் சேர்ந்த இவர், சபரீஷின் இதயத்தை தானமாக பெற்றது நான் தான். அவரால்தான் இப்போது உயிர் வாழ்கிறேன் என்று சபரீஷின் பெற்றோரிடம் கூறினார்.
÷ இதைக் கேட்டதும் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்த சபரீஷின் பெற்றோர் தனது மகனின் மறு உருவாக அபிநயாவைக் காண்பதாகக் கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதையடுத்து தனது பெற்றோருடன் சபரீஷின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அபிநயா.
இதைத் தொடர்ந்து சபரீஷின் பெற்றோர், தனது மகனுக்குப் பிடித்த உணவுகள், பதார்த்தங்களை செய்து அபிநயாவுக்கு வழங்கினர். பி.எஸ்சி. மைக்ரோ பயாலஜி படித்துள்ள அபிநயா உடல் நிலை காரணமாக இப்போது வீட்டிலேயே உள்ளார். சபரீஷிடம் இதயம் தானமாகப் பெற்றது குறித்து அவர் கூறும்போது, சபரீஷின் இதயத்தால்தான் இன்று உயிர் வாழ்கிறேன். மேலும் சிலரும் அவரால் உயிர் வாழ்கின்றனர். எனவே உடல் உறுப்பு தானம் குறித்து நானும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றார். இது குறித்து சபரீஷின் தந்தை நந்தீஷ்குமார் கூறியது: எனது மகனின் உடல் உறுப்புகள் யாருக்கு பொருத்தப்படுகின்றன என்ற விவரம் எனக்கு தெரியாமலேயே இருந்தது. சில நாள்கள் கழித்து இதயம் அபிநயாவுக்கு பொருத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். அவர்களது தொடர்பு எண் எங்களுக்கு கிடைத்த போதிலும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரிடம் இப்போதைக்கு பேச வேண்டாம் என்று தவிர்த்து வந்தோம். அவர்களை நேரில் சந்திக்க என் மனைவி ஆசைப்பட்டாலும் அந்த பெண்ணின் உடல் நிலையால் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று நினைத்து சந்திக்கவில்லை. இப்போது சபரீஷின் முதலாண்டு நினைவு நாளையொட்டி எங்கள் முகவரியை தெரிந்து கொண்டு அவர்களே எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். அஞ்சலி செலுத்தியதும் பஸ்ஸில் கிளம்புவதாக கூறினார். ஆனால் நாங்கள் அவர்களை தங்க வைத்து இரவில் ரயிலில் அனுப்ப முடிவு செய்துள்ளோம். எனது மகனின் கண்கள் இரண்டும் மும்பையை சேர்ந்தவருக்கு பொருத்தப்பட்டதாகவும், கல்லீரல் இரண்டாக வெட்டி இருவருக்கு பொருத்தப்பட்டதாகவும் இருப்பினும் அவர்கள் யார் என்பது தெரியாது. இருப்பினும் எனது மகனால் சிலர் உயிர் வாழ்வது பெருமையாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.