கோவை, ஜன. 8: இளைஞர்களுக்கு தெளிவான இலக்கு அவசியம் என்று, கோவை கலால் வரித்துறை ஆணையர் சி.ராஜேந்திரன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கூறினார்.
கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது. இதில், கோவை கலால் மற்றும் சேவை வரித்துறை ஆணையர் சி.ராஜேந்திரன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியது:
பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள்.
இதுவரை பெற்றோர், ஆசிரியர்கள் உங்களைப் பாதுகாத்தனர். இனி சூழ்நிலைகளை எதிர்கொண்டு சமாளிக்கத் தயாராகுங்கள். வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் துணிந்து ஓடி நீங்கள் வெற்றி பெற வேண்டும்.
இன்று நமது நாட்டில் தரமான கல்வியோடு படிப்பிற்கேற்ற வேலையும் கிடைக்கிறது. வேலைவாய்ப்பு தருவதில் முன்னோடி நாடாக இந்தியா விளங்குகிறது. இளைஞர்களுக்கு தெளிவான இலக்கு அவசியம். ஒழுக்கம், உண்மை,தன்னம்பிக்கையுடன் முயன்று இலக்கை அடைய வேண்டும்.
எவ்வளவு உயரமாகப் பறந்தாலும் தன்னடக்கம் அவசியம். தேர்ந்தெடுக்கும் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து முடிக்க வேண்டும். பெற்ற கல்வியின் பயனை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றார்.