தண்ணீரின்றி வாடும் மரவள்ளிக்கிழங்கு பயிர் கவலையில் கடம்பூர் விவசாயிகள்

 சத்தியமங்கலம், ஆக. 21: பருவமழை ஏமாற்றியதால், கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிர் வாடி வருகிறது.  சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள கடம்பூர்,

 சத்தியமங்கலம், ஆக. 21: பருவமழை ஏமாற்றியதால், கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிர் வாடி வருகிறது.

 சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள கடம்பூர், கரளையம், எக்கத்தூர், சுஜில்கரை, கோட்டமாளம், மாக்கம்பாளையம், குன்றி இருட்டிபாளையம் மற்றும் அணைக்கரை ஆகிய இடங்களில் மானாவாரி முறையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பழங்குடியின மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஜவ்வரிசி ஆலைகளுக்கான கிழங்குகள் இங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

 கடம்பூர் மலைப்பகுதி செம்மண் நிலமாக இருப்பதால் ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு டன் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் வரை விற்பனையானது. இந்நிலையில், கடந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்கியதால் ஏக்கருக்கு 3 டன் மட்டுமே மகசூல் கிடைத்தது.

 மேலும், மரவள்ளிக்கிழங்கு மாவு இறக்குமதி செய்யப்பட்டதாலும், ஜவ்வரிசி ஆலைகளில் இருந்து கழிவுநீரை அகற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் ஆலைகளைத் தொடர்ந்து இயக்குவது கேள்விக்குறியானது. இதனால், மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயங்கினர். இதன் எதிரொலியாக, மரவள்ளி டன் ஒன்றுக்கு ரூ. 2400 மட்டுமே கிடைத்தது. விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

 இத்தகைய காரணங்களால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகள் தயங்கினர். இருப்பினும், நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். இப்போது பயிர்கள் ஒரளவு வளர்ந்துள்ள நிலையில், வறட்சியின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

 நடவுக் கூலி, உரச் செலவு, பராமரிப்புச் செலவு மற்றும் வண்டி வாடகை என்று ஏராளமாகச் செலவாகிறது. கிடைக்கும் விலை அதற்கே போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

 இது குறித்து தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத் தலைவர் கடம்பூர் கே. ராமசாமி செவ்வாய்க்கிழமை கூறியது:

 கடம்பூர் மலைப்பகுதி மானாவாரி நிலம் என்பதால் மழையை எதிர்பார்த்துதான் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. பருவமழை ஏமாற்றியதால், 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மரவள்ளிக் கிழங்கு பயிர் வாடுகிறது. இதனால் பெரும் இழப்பைச் சந்தித்து வரும் விவசாயப் பழங்குடியின மக்களுக்கு அரசு மானிய விலையில் உரம், பூச்சி மருந்து, கறவை மாடுகள் மற்றும் வட்டியில்லாக் கடன் வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com