வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குப்பை லாரிகள், வாகனங்கள் டீசல் நிரப்புவதில் முறைகேடு!

திருப்பூர், ஆக. 22: திருப்பூர் மாநகராட்சியில் குப்பை லாரிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கான டீசல் பயன்பாட்டில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மாநராட்சி நிர்வாகம் அதிரடி ந

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:59 am

கே.கே.மணிகண்டன்

திருப்பூர், ஆக. 22: திருப்பூர் மாநகராட்சியில் குப்பை லாரிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கான டீசல் பயன்பாட்டில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மாநராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை லாரிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதில், தனியார் பெட்ரோல் பங்க் நிர்வாகமும், மாநகராட்சியின் சுகாதாரத் துறை ஆய்வாளர் ஒருவரும் இணைந்து, டீசல் கணக்கு அளவை அதிகமாகக் காட்டி, அதற்கான பணத்தை பங்கிட்டுக் கொண்ட முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன்மூலமாக ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக, மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் லாரிகள் அனைத்தும் மாட்டுக் கொட்டகை மைதானத்தில் நிறுத்தப்பட்டு வந்தன. அங்குள்ள சுகாதார ஆய்வாளர் ஒருவரின் பொறுப்பில் வாகனங்களுக்குத் தேவையான டீசல் அருகிலுள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் நிரப்பப்படுவது வழக்கம்.

இவ்வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மற்ற பிரிவுகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கும் கூடுதல் கிலோ மீட்டர் இயக்கியதாகக் கணக்கு காட்டப்பட்டு, மாநகராட்சிப் பணம் சுரண்டப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

மீட்டர் இல்லாத லாரிகள்: இந்த லாரிகளில் மீட்டர் கருவி இருக்காது. ஒரு சில லாரிகளில் மீட்டர் கருவி இருந்தாலும் வேலை செய்யாது. கடந்த 10 ஆண்டுகளாக லாரிகளுக்குத் தேவையான உதிரிபாகங்கள் குறித்துக் கொடுக்கப்பட்ட பட்டியலில் மீட்டர் கேட்கப்பட்டதே இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இந்த முறைகேடுகள் அண்மையில் தெரியவந்ததை அடுத்து, சுகாதார ஆய்வாளர் கட்டுப்பாட்டில் இருந்த டீசல் நிரப்பும் பணி பறிக்கப்பட்டது. ஒரே இடத்தில் (மாட்டுக் கொட்டகையில்) வாகனங்கள் நிறுத்தப்படுவற்குப் பதிலாக, இவ்வாகனங்கள் அனைத்தையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த மண்டலத்துக்கு உள்பட்ட இடங்களில் குப்பை லாரிகளை நிறுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தவிர லாரிகள் பராமரிப்புப் பணி, உதவி ஆணையர்கள், உதவிப் பொறியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முந்தைய காலத்தில் டீசல் நிரப்பியதற்கான நிலுவை பில் தொகையை வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

லாரிகளின் டிரிப் ஷீட், டீசல் பயன்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வாரந்தோறும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற அதிரடி உத்தரவால் ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது:

மண்டல வாரியாக லாரிகள் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டதன் மூலமாக உண்மையான டீசல் பயன்பாடு தெரிய வந்துள்ளது. இதற்கு முந்தைய காலத்தில் இருந்ததைவிட 60 சதவீதம் தான் தற்போது டீசல் பயன்பாடு ஆகிறது.

ஒருநாள் விட்டு ஒருநாள் என லாரிகளுக்கு 80 லிட்டர் டீசல் நிரப்பட்ட நிலையில், தற்போது 60 லிட்டர் மட்டுமே நிரப்பப்படுகிறது. மாதம் 1,300 லிட்டர் டீசல் பயன்படுத்தப்பட்ட ஒரு லாரிக்கு, தற்போது 790 லிட்டர் தான் நிரப்பப்படுகிறது.

இதற்கு முந்தைய காலங்களில், ஒட்டுமொத்தமாக மாதம் ரூ. 30 லட்சம் வரை டீசல் செலவு இருந்தது. தற்போது மண்டலத்துக்கு தலா ரூ. 4 லட்சம் என மொத்தமாக ரூ. 16 லட்சம் மட்டுமே டீசல் செலவு ஏற்படுகிறது என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜிடம் கேட்டபோது, முன்னர் ஒரே இடத்தில் வைத்து லாரிகள் பராமரிக்கப்பட்டன.

தற்போது, மண்டல வாரியாக லாரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. டீசல் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இனி, மாநகராட்சியின் அனைத்து வாகனங்களுக்கும் டீசல் பயன்பாட்டுக்கு சீலிங் முறை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தார்ச் சாலைக்கு ஏங்கும்

நல்லூர்பாளைய கிராம மக்கள்

காங்கயம், ஆக. 22: காங்கயம் அருகே தார்ச் சாலை அமைத்துத் தர வலியுறுத்தி, 20 ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் (படம்).

காங்கயம்-முத்தூர் சாலையில் உள்ளது நல்லூர்பாளையம். இப்பகுதி மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீ. உள்புறத்தில் உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் காங்கயம் மற்றும் புதூர் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்குச் செல்ல இந்த கிளைச் சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச் சாலையாக இருந்த இப்பாதை முற்றிலும் சிதிலமடைந்து கரடு, முரடான மண் பாதையாக மாறியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் முருகேசன் கூறுகையில், நல்லூர்பாளையத்துக்கு வரும் சாலை, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தார் பெயர்ந்து சிதிலமடைந்துவிட்டது. சுற்றுப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊர்களுக்கு செல்லும் சாலைகளும் தார்ச் சாலைகளாக மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால், எங்கள் ஊருக்கு வரும் சாலை மட்டும் மண் பாதையாகவே உள்ளது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ., அமைச்சர்கள், அதிகாரிகள் வரை பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இப்பகுதிக்கு உடனடியாக தார்ச் சாலை அமைத்துத் தர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.