மேட்டுப்பாளையம், பிப். 10: மேட்டுப்பாளையம் பகுதியில் நிலவி வரும் 10 மணி நேர மின்வெட்டை கண்டித்து, வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 3 நாட்களாக 8 மணிநேர மின் வெட்டு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது.
இதனால் நகரப் பகுதி வர்த்தகர்களும், தொழில் நிறுவனத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு ஏற்படுவதில் உறுதியான நிலைப்பாடு தெரியாததால், தொழிலாளர்களும் பணி செய்ய முடியாமல் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
மேலும் பள்ளி இறுதியாண்டு தேர்வுகளும் நடைபெற இருப்பதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஏற்படும் திடீர் மின் வெட்டால் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், அறிவிக்கப்படாத 10 மணிநேர மின்வெட்டை கண்டித்தும், அதை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் மேட்டுப்பாளையம் எம்எஸ்ஆர் புரம் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், அண்ணாஜிராவ் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போக்குவரத்து வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது. உடனே மறியலில் ஈடுபட்டவர்கள் அனைத்து சாலைகளிலும் தடை ஏற்படும் வகையில் இடத்தை மாற்றி, பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரவணன், மின்வாரிய இளநிலை செயற்பொறியாளர் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் மறியலில் இருந்தவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இறுதியில், மின்வெட்டை சரி செய்ய மண்டல தலைமை அதிகாரி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், நிலைமை விரைவில் சீரடையுமென இளநிலை பொறியாளர் காமராஜ் உறுதி கூறியதை தொடர்ந்து மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.