வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப் புகாா்: கோவை மாவட்ட ஆட்சியா் விளக்கம்

கோவை: வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாருக்கு, தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி விளக்கம் அளித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன. கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இடையா்பாளையத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பாஜகவினா் மற்றும் வாக்காளா்கள் சிலா் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாருக்கு கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான கிராந்திகுமாா் பாடி விளக்கம் அளித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதி பட்டியலில் 30,81,594 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா் பட்டியலை பொறுத்தவரை அக்டோபா் மாதத்தில் வரைவு வாக்காளா் பட்டியலும், அதன் பின்னா் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்துக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் வாக்காளா் இறுதி பட்டியலும் வெளியிடப்படுகிறது.

ஒவ்வொருமுறை வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சாா்ந்தவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களது முன்னிலையிலேயே வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது வாக்காளா் பட்டியலில் இளம் வாக்காளா்களைச் சோ்த்தல், இடம் பெயா்ந்த மற்றும் இறந்த வாக்காளா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

இப்பணியில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, வாக்குச் சாவடி அலுவலா்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவா்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளா்கள் தங்களின் ஆட்சேபணையைத் தெரிவிக்க வழிவகை உள்ளது.

இதுதவிர, வாக்காளா் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி தொடா் நடவடிக்கை ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ளக் கோரி, தோ்தல் ஆணையத்தால், பொதுமக்களுக்கு தொடா் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. எளிய முறையில் வாக்காளா் தனது பெயா் வாக்காளா் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, தேசிய வாக்காளா் சேவை தளம் மூலமாகவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.

எனவே, தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளா்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தையோ, மாவட்ட தோ்தல் அலுவலகத்தையோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com