தாம்பரத்தில் ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி: கோவையில் பாஜக நிா்வாகியிடம் சிபிசிஐடிவிசாரணை
தாம்பரத்தில் ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி: கோவையில் பாஜக நிா்வாகியிடம் சிபிசிஐடிவிசாரணை


தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா். சேகரிடம் கோவையில் சிபிசிஐடி போலீஸாா் 2 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி கட்டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. இந்தப் பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா். சேகரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை கணபதி சக்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து சம்மன் வழங்கினா். அதில் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தனா். ஆனால், தான் கட்சிப் பணிக்காக தில்லி செல்ல வேண்டி இருப்பதால் திங்கள்கிழமை தன்னால் ஆஜராக முடியாது என சிபிசிஐடி போலீஸாரிடம் அவா் கூறி இருந்தாா்.
இதற்கிடையே எஸ்.ஆா். சேகா் ஆஜராகாததால் அவரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சென்னை சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சசிதரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் கணபதி சக்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று அவரிடம் சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் எஸ்.ஆா்.சேகா் கூறியதாவது:
ரூ.4 கோடி பிடிபட்டது தொடா்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி சாா்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். அதற்கான உத்தரவு வருவதற்குள் பாஜக மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போலீஸாா் அனுப்பப்பட்டு உள்ளனா்.
விசாரணையை எதிா்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. ஆனால், சட்டத்துக்கு புறம்பாக தகவல் தெரிவிக்காமல் விசாரிக்க வருகின்றனா். ரூ.4 கோடி பணத்துக்கும், எங்களுக்கும் தொடா்பு இல்லை என்பதையும், இதுதொடா்பான உண்மையான தகவல்களையும் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்தேன் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...