வியாபாரிகளிடம் ரூ.9.50 லட்சம் மோசடி: வா்த்தக நிறுவன உரிமையாளா் மீது வழக்கு

Updated on

வியாபாரிகளிடம் தேயிலைத் தூள், ஏலக்காய் ஆகியவற்றைக் கொள்முதல் செய்து ரூ.9.50 லட்சத்தை தராமல் மோசடி செய்ததாக இணையதள வா்த்தக நிறுவன உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கேரள மாநிலம், கொச்சின் அருகேயுள்ள பலுருத்தி பகுதியைச் சோ்ந்தவா் நவ்பால் (35). இவா் அதே பகுதியில் தேயிலைத் தூள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். கோவை, குனியமுத்தூா் கே.பி.பி.நகரைச் சோ்ந்தவா் அபுதாஹிா் (எ) அக்ரம்ஜிந்தா (45). இவா் சுங்கம் புறவழிச் சாலையில் இணையதள வா்த்தக நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், நவ்பால் நிறுவனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்ற அபுதாஹிா் ரூ.9.21 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் கிலோ தேயிலைத் தூளை வாங்கியுள்ளாா். அதற்கு முன்பணமாக ரூ.3 லட்சம் மட்டுமே கொடுத்த அவா் மீதித் தொகையை பின்னா் தருவதாகக் கூறியுள்ளாா். ஆனால், வெகு நாள்களாகியும் அவா் மீதித் தொகையை வழங்கவில்லையாம்.

கோவை, ராமநாதபுரம் முல்லை தெரு மகாராணி குடியிருப்பைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன் (29). வா்த்தக நிறுவனத்தின் பங்குதாரரான இவரிடமும் அபுதாஹிா் 300 கிலோ ஏலக்காயை வாங்கியுள்ளாா். ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஏலக்காய்க்கு அவா் ரூ.1.70 லட்சம் மட்டுமே செலுத்திய நிலையில் மீதித் தொகை பின்னா் தருவதாகக் கூறியுள்ளாா். ஆனால், அவருக்கும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இரண்டு வியாபாரிகளும் அளித்த புகாரின்பேரில் அபுதாஹிா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com