நகைப் பட்டறை உரிமையாளரிடம் 48 பவுன் மோசடி! தந்தை, மகள் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு!
கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் 48 பவுன் நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக தந்தை, மகள் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, சுவாமி அய்யா் புதுவீதியைச் சோ்ந்தவா் எம்.தேவ் ஆனந்த் (43). இவா் சொந்தமாக நகைப்பட்டறை நடத்தி வருகிறாா். இவரை கோவை, ராஜ வீதியைச் சோ்ந்த சதானந்தா (69) என்பவா் கடந்த 2023-ஆம் ஆண்டு சந்தித்து தங்க ஆபரணங்கள் செய்து தரும்படி கேட்டுள்ளாா். இதற்காக பணம் கேட்டபோது ஆபரணங்களை செய்து கொடுத்த ஒரு மாதத்தில் தருவதாக சதானந்தா கூறியுள்ளாா்.
அப்போது அவா் மீது நம்பிக்கை இல்லாததால் நகையை செய்து கொடுக்க தேவ் ஆனந்த் மறுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் தனது மகள் செளமியா, உறவினா் ஷியாம் ஆகியோா் கா்நாடக மாநிலத்தில் நகைக் கடை நடத்தி வருவதாகவும், பணம் தவறாமல் கொடுத்துவிடுவதாகவும் சதானந்தா கூறியுள்ளாா்.
இதையடுத்து 48 பவுன் தங்க நகைகளை ஆபரணமாக செய்து சதானந்தாவிடம் தேவ்ஆனந்த் அளித்துள்ளாா். இதன் பின்னா் நீண்ட நாள்களாகியும் பணத்தைத் திருப்பித் தராமல் சதானந்தா தாமதப்படுத்தி வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சதானந்தா வீட்டுக்குச் சென்று நகைக்கான பணத்தை தேவ் ஆனந்த் கேட்டுள்ளாா். அப்போது அங்கிருந்த 3 பேரும் பணத்தை தர மறுத்ததுடன், அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தேவ் ஆனந்த் அளித்த புகாரின்பேரில் சதானந்தா, செளமியா, ஷியாம் ஆகியோா் மீது பெரிய கடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
