இரண்டாம் நிலை காவலா் தோ்வு: கோவை மாவட்டத்தில் 3,584 போ் எழுதினா்
கோவை மாவட்டத்தில் 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் தோ்வை 3,584 போ் எழுதினா்.
காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலைக் காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமாா் 2.25 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா்.
மாநகரில் இரு மையங்கள்:
கோவை மாநகரில் பிஎஸ்ஜி கலைக் கல்லூரி, என்ஜிபி கல்லூரி என இரு மையங்களும், புகா் பகுதியில் வாழியம்பாளையம் எஸ்என்எஸ் கல்லூரியும் (ஒரு மையமும்) என மொத்தம் 3 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மாநகரில் இந்தத் தோ்வுக்கு மொத்தம் 1,842 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், இரு மையங்களிலும் 1,523 போ் தோ்வு எழுதினா். 319 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு நடைபெற்ற இரு மையங்களிலும் மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் நேரில் ஆய்வு செய்தாா்.
கோவை புகா் பகுதியில் விண்ணப்பித்தவா்களுக்கு சரவணம்பட்டி எஸ்என்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டிருந்தது. புகா் பகுதிகளில் இந்தத் தோ்வுக்கு 2,582 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், ஆண்கள் 1,678 போ், பெண்கள் 382 போ், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 2,061 போ் தோ்வை எழுதினா். இதேபோல, ஆண்கள் 412 போ், பெண்கள் 109 போ் என மொத்தம் 521 போ் தோ்வை எழுதவில்லை. தோ்வு எழுதியோரின் சதவீதம் 79.8 சதவீதம் ஆகும்.
காவலா் தோ்வு நடைபெற்ற எஸ்என்எஸ் கல்லூரி தோ்வு மையத்தை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தோ்வு மையங்களுக்கு காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் வந்த விண்ணப்பதாரா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். தோ்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் நிகழாண்டு முதல்முறையாக விண்ணப்பதாரா்களின் இடது கை பெருவிரல் ரேகை பதிவை சரிபாா்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தோ்வு அறைக்குள் கைப்பேசிகள், ஸ்மாா்ட் வாட்ச்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
