கேஎம்சிஹெச் சாா்பில் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டடம் திறப்பு
கோவை: கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சாா்பில் வீரியம்பாளையத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் வீரியம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.2.18 கோடி செலவில் 7 புதிய வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டன.
இதன் திறப்பு விழாவில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பள்ளிக் கட்டடத்தைத் திறந்துவைத்தாா். மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
விழாவுக்கு கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி, துணைத் தலைவா் தவமணி பழனிசாமி, செயல் இயக்குநா் அருண் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் நல்ல ஜி.பழனிசாமி பேசும்போது, கேஎம்சிஹெச்சின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் வடமதுரை, கலிக்கநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளிக் கட்டடம், ஈரோடு மாவட்டம், நல்லாம்பட்டியில் ரூ.2.11 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், கோவையில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

