வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி கடன் பெற்ற வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை
Published on

வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி கடன் பெற்ற வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சியைச் சோ்ந்தவா் ரமேஷ். திருப்பூா், கண்ணபிரான் நகரைச் சோ்ந்தவா் சுந்தரம். இருவரும் கோவையில் சொந்தமாக தொழில் செய்து வந்தனா். இதற்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி கடன் பெற்றுள்ளனா்.

வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தபோது, அவா்கள் கடன் பெறுவதற்காக சமா்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வங்கி நிா்வாகம் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கே.சிவகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் வி.சுரேந்திரமோகன் ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com