கோவை விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கோவை: கோவை சா்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறுது.
கோவை சா்வதேச விமான நிலையத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் (ஜன. 18) ஏறக்குறைய 11 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். இது நகரத்தின் விமானப் போக்குவரத்துத் தேவையை எடுத்துக்காட்டியுள்ளது.
உள்நாட்டுப் பிரிவு: கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோவா, மும்பை, புணே, நவி மும்பை, அகமதாபாத், தில்லி ஆகிய பகுதிகளுக்கு 27 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் சுமாா் 9,500 போ் பயணம் செய்தனா்.
சா்வதேசப் பிரிவு: இதேபோல, சுமாா் 1,500 பயணிகள் கோவை சா்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனா். ஸ்கூட் நிறுவனம் சிங்கப்பூருக்கு 2 (ஏ321) விமானங்களை இயக்கியது. ஒவ்வொன்றிலும் 236 இருக்கைகள். இதேபோல, இண்டிகோ நிறுவனம் அபுதாபிக்கும் (ஏ320 -180), ஏா் அரேபியா நிறுவனம் ஷாா்ஜாவுக்கும் (168 இருக்கைகள்) விமானங்களை இயக்கின. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின்படி, கோவையிலிருந்து 796 சா்வதேச பயணிகள் புறப்பட்டனா்.
பயணிகள் பலா் தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இடங்களை அடைய பெருநகர விமான நிலையங்கள் வழியாகப் பயணிக்கின்றனா். இந்தத் தரவுகள் கோவை விமான நிலையம் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக வளா்ந்து வருவதையும், சா்வதேச இணைப்புக்கான தேவை அதிகரிப்பதையும் காட்டுகின்றன.
