ஆழியாறு அருகே அடையாளம் இல்லாத மலைவாழ் குடும்பம்: குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில் சிக்கல்
பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அருகே, குடும்ப அட்டை உள்பட எந்தவித அடையாளமும் இல்லாமல் ஒரு மலைவாழ் குடும்பம் வசித்து


பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அருகே, குடும்ப அட்டை உள்பட எந்தவித அடையாளமும் இல்லாமல் ஒரு மலைவாழ் குடும்பம் வசித்து வருகிறது. இதனால், அவர்களின் நான்கு குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அருகே மலசர் எனும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் ரவி (36) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி எனும் மனைவியும், காயத்ரி, காவ்யா, சரசாள், ராசாத்தி என நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர், ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியை ஒட்டிய மலையடிவார விவசாயத் தோட்டங்களில் கூலிவேலை செய்துவருகிறார். இவருக்கும், இவரது குடும்பத்துக்கும் எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள கால்வாய் அருகே, சிறிய குடிசை அமைத்து, யாரும் இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ரவிக்கும், அவரது மனைவிக்கும் கல்வி அறிவு இல்லை. மேலும், வெளி உலகத்துடனும் தொடர்பு இல்லை. தாங்கள் கூலி வேலை செய்யும் சில விவசாயிகளை மட்டும் தெரிந்து வைத்துள்ளனர்.
மலைவாழ் இனத்தை சேர்ந்த ரவி தனக்கென குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நான்கு குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்று, பிறப்புப் பதிவு என எந்த விதமான பதிவுகளும், அடையாளங்களும் இல்லாமல் வசித்து வருகிறார்.
இதற்குக் காரணம் இவரின் அறியாமை மட்டுமின்றி பிறர் யாருடனும், எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாததும்தான். இவர், இதுவரை வாக்களிக்கவில்லை. மேலும், குழந்தைகள் நான்கு பேருமே தனது குடிசையிலேயே பிறந்ததாகக் கூறுகிறார். இப்படி, எந்தவித அடையாளமும் இல்லாமல் வசித்து வந்தவரை ஆழியாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமியும், சமூக ஆர்வலர் செல்வராஜ் என்பவரும் சந்தித்துப் பேசிவந்துள்ளனர்.
ரவியின் அறியாமையை அறிந்த விவசாயி பழனிசாமி ரவியைக் குடும்பத்துடன் அழைத்து வந்து தனது தோட்டத்தில் குடிசை அமைத்துக் கொடுத்து தங்கவைத்துள்ளார். மேலும், ஆழியாறு மலைவாழ் மக்கள் பள்ளியில் சேர்க்க மூன்று குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பள்ளியில் சேர்க்க, பிறப்புச் சான்றிதழ் உள்பட எந்த விதமான அடையாள அட்டைகளும் இல்லை.
இருப்பினும், பள்ளித் தலைமை ஆசிரியர், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள், கல்வி கற்றுத் தருகிறோம், ஆனால் விரைவில் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கவேண்டும், அப்போதுதான் முறைப்படி பள்ளியில் சேர்க்கையை அனுமதிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இப்படி, வெளி உலகம் தெரியாமலும், அடையாளமும் இல்லாமல் வாழ்ந்துவரும் மலைவாழ் இன குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் கல்வி கற்கும் வயதை எட்டியும், சான்றிதழ்கள் ஏதும் இல்லாததால், கல்வி கற்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுதவிர அரசின் எந்தவிதச் சலுகைகளும் கிடைக்கவில்லை. எனவே, அரசு அதிகாரிகள் உதவி செய்து, அவருக்கான அடையாளத்தை வழங்க முன்வரவேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...