காரமடை அரங்கநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: இன்று தேரோட்டம்

காரமடை அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருத் தேர் உற்சவத்தின் 7-ஆம் நாளான புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
Updated on
1 min read

காரமடை அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருத் தேர் உற்சவத்தின் 7-ஆம் நாளான புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
  இக்கோயில் தேர் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது.
 அதைத் தொடர்ந்து திருக்கொடியேற்றம், அன்ன, சிம்ம,அனுமந்த வாகனங்களில் உற்சவர் உலா,  கருடசேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 27-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்பதற்காக பெட்டதம்மன் கோயிலிலிருந்து தாயாரை அழைத்து வரும் ஸ்ரீபெட்டதம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி,  காலை 11 மணி அளவில் பெட்டதம்மன் மலைக்குகையில் குடி கொண்டிருக்கும் அம்மனை அழைத்துவர சீர்வரிசைகளோடு அரங்கநாதர் புறப்பட்டுச் செல்லும்  நிகழ்வு நடைபெற்றது. திருமலை நல்லான் சக்கரவர்த்தி சுவாமிகள், வேதவியாசக சுதர்ஷன பட்டர் சுவாமிகள், திரளான பக்தர்கள் உடன் சென்றனர். அரங்கநாதரை கோயில் செயல் அலுலர் பெரிய மருதுபாண்டியன், கட்டேமனைகவுடர் ரங்கராஜ், ஊர்கவுடர் முத்துசாமி, மிராசுகள் ராஜப்பன், ஜெகநாதன், கிருஷ்ணன் வழியனுப்பி வைத்தனர்.  
   இதைத் தொடர்ந்து மதியம் பெட்டதாபுரம் ஊர் மக்கள் மலையிலிருந்த அம்மனை திருக்கோயிலுக்கு வழியனுப்பிவைக்கும் வைபவம் நடைபெற்றது. பெட்டதாபுரம் மலைக்கோயிலில் அம்மனை அழைக்க வந்த  5,000 பக்தர்களுக்கு காரமடை கே.வி.பி கோவிந்தன் குடும்பத்தார் சார்பில் அன்னதானம் வழஙகப்பட்டது.
 மலையிலிருந்து வந்த அம்மனை பெட்டதாபுரம் மலையடிவாரத்திலிருந்து திருக்கோயில் வரை நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் கூட்டமாக காத்திருந்து அம்மன் வரும் பாதையில் நீர் ஊற்றி, திருவிளக்கேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு வரவேற்றனர்.  இரவு 11 மணி அளவில் அம்மன் திருக்கோயில் வந்தடைந்தார்.
     திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடை பெற்றது. கோயில் உள்பிரகார மண்டபத்தில் ஸ்ரீஅரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் முன்னிலையில் கோயில் ஸ்தலத்தார் சுவாமிகள் உள்பட கோயில் அர்ச்சகர்கள்,  அரங்கநாதப் பெருமாள் திருக்கல்யாண
உற்சவத்தை நடத்திவைத்தனர். தாசபளஞ்சிக மகாஜன சங்கத் தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட கோயில் மிராசுகளும், பெரியோர்களும், பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
    தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, நான்கு ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் வட்டாட்சியர் ரங்கராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில்
அகற்றப்பட்டன. மார்ச் 1-ஆம் தேதி மாலை நடைபெறும் தேரோட்டத்தையொட்டி,  அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் திருத்தேர்  வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com