ஸ்டெம் செல் தானமாக வழங்கி பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய கோவை இளைஞர்
ஸ்டெம் செல் தானமாக வழங்கி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தில்லி பெண்ணின் உயிரைக் கோவை இளைஞர் காப்பாற்றியுள்ளார்.


ஸ்டெம் செல் தானமாக வழங்கி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தில்லி பெண்ணின் உயிரைக் கோவை இளைஞர் காப்பாற்றியுள்ளார்.
தாத்ரி என்ற தன்னார்வ அமைப்பு நாடு முழுவதும் உள்ள ஸ்டெம் செல் கொடையாளிகளின் விவரங்களைப் பதிவு செய்து,சேகரித்து வைத்துள்ளது. இந்நிலையில், தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான கரீமா சரஸ்வத் (34) என்ற பெண் கலப்பு பினோட்டிபிக் அக்யூட் லுகேமியா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு நோய் குணமடையவில்லை.
இந்நிலையில், ரத்து குருத்தணு மாற்றும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார். இதையடுத்து, தாத்ரி அமைப்பின் மூலம் ஸ்டெம் செல் கொடையாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது, கோவை, சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த கார் மெக்கானிக் குருமூர்த்தி (29) என்பவரது ஸ்டெம் செல் கரீமா சரஸ்வத்துக்கு பொருந்தியது தெரியவந்தது. பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு குருமூர்த்தியின் ஸ்டெம் செல் 2017 பிப்ரவரி மாதம் கரீமாவுக்கு தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் கரீமா புற்றுநோயில் இருந்து குணமடைந்தார்.
இதையடுத்து, தாத்ரி அமைப்பு சார்பில் ஸ்டெம் செல் தானமாக வழங்கிய குருமூர்த்தி மற்றும் தானம் பெற்ற கரீமாவின் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் அண்மையில் நடைபெற்றது.
இது குறித்து தாத்ரி அமைப்பின் கோவைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்வாதிகா கூறியதாவது:
பொதுவாக தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தக் கூடிய ஸ்டெம் செல்லை தானமாக கொடுப்பதன் மூலம் அவர்களைக் காப்பாற்ற முடியும். இதனைக் கருத்தில் கொண்டு தாத்ரி அமைப்பு சார்பில் நாடு முழுவதும் ஸ்டெம் செல் கொடையாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கோவையைச் சேர்ந்த இளைஞர் குருமூர்த்தியின் உறவுப் பெண் ஒருவர் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், ஸ்டெம்செல் தானமாக வழங்குவதன் மூலம் ஒருவரின் உயிரைக் காக்க முடியும் என்ற விவரம் குருமூர்த்திக்குத் தெரியவந்தது. தாத்ரி அமைப்பில் குருமூர்த்தி பதிவு செய்திருந்தார். அதன் மூலம் தில்லியைச் சேர்ந்த கரீமாவின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
பொதுவாக ஒருவரது ஸ்டெம் செல் மூலமே அவர்களது உடலில் சிவப்பு, வெள்ளை ரத்த அணுக்கள், ரத்தத் தட்டுகள் உற்பத்தியாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிரியக்கம் செலுத்துவதன் மூலம் அவர்களது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்கள் இறந்துபோகும். ரத்தம் தொடர்பான நோயால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பொருத்தமான ஸ்டெம் செல் கொடுப்பது மூலம் அவர்களை நோயில் இருந்து குணப்படுத்த முடியும். ஸ்டெம் செல் தேவைப்படுவோருக்கு 10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் பேரில் ஒருவரிடம் இருந்துதான் பொருத்தமான ஸ்டெம் செல் கிடைக்கும்.
ஸ்டெம் செல் தானமாக வழங்குபவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஸ்டெம் செல் தானமாக வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். தாத்ரி அமைப்பு மூலம் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி 5,590 கொடையாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 3 லட்சம் கொடையாளிகள் பதிவு செய்துள்ளனர். ஸ்டெம் செல் கொடைக்காக நூற்றுக்கணக்கான குழந்தைகள் காத்துள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...