தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கோவை மாநகரில் காவல் துறையினர் ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கோவை மாநகரில் உள்ள துணிக்கடைகள், இனிப்பு விற்பனைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது. இதில், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட், காந்திபுரம், 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடைகள் எடுக்க உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் குவிந்தனர். மேலும், மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமையும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின்பேரில், மாநகரில் காவல் துறையினர் ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வழிப்பறி நபர்களிடம் பொருள்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு ஒலி பெருக்கிகள் மூலமாக அறிவிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், பிரகாசம் சாலை சந்திப்பில் கண்காணிப்புக் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி ஆகிய பேருந்து நிலையங்களில் வெளியூர் செல்வதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அதே போல், கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
பட்டாசுக் கடைகளிலும் கூட்டம்: கோவை மாநகரில் உள்ள பட்டாசுக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. அதிலும், வடகோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் அதிக அளவிலான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பட்டாசுகள் வாங்கிச் சென்றனர்.
கோவை புறநகரில் காவல் துறையினர் 500 பேர் பாதுகாப்பு: கோவை புறநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட சூலூர், கருமத்தம்பட்டி, பேரூர், பொள்ளாச்சி, பெ.நா.பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் உத்தரவின்பேரில் காவல் துறையினர் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








