ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவருக்கு விருது

உள்ளாட்சியில் சிறந்த சேவையை பாராட்டி, மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆர்.சண்முகத்துக்கு   தமிழக ஆளுநரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

உள்ளாட்சியில் சிறந்த சேவையை பாராட்டி, மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆர்.சண்முகத்துக்கு   தமிழக ஆளுநரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 
தனியார் தொலைக்காட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 15 நபர்களைத் தேர்வு செய்து விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற்றது.  
இதில் தேர்வானவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது.  
இதில்,  உள்ளாட்சி அமைப்பில் சிறப்பாக சேவை செய்தமைக்காக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆர்.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.  அவருக்கு "பொறுப்பும்-பொதுநலமும்' என்ற சிறப்பு விருதினை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன்,  பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இந்த விருது குறித்து ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் கூறியதாவது : 
இந்த ஊராட்சியில் நானும், அதையடுத்து எனது மனைவி லிங்கம்மாளும் தலைவர்களாக இருந்தபோது ஊராட்சி மக்களின் மேம்பாட்டுக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இந்தியாவிலேயே முதன்முதலாக எங்கள்  ஊராட்சியில்தான் ராஜீவ் காந்தி தேசிய குடிநீர்த் திட்டம் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
மலைவாழ் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்காக 850 தொகுப்பு மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டு,  குடிசைகளே இல்லாத ஊராட்சியாகவும் இதை மாற்றி உள்ளோம். பல்வேறு சிறப்பு சேவைகளுக்காக இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, குடியரசு தலைவர் விருதும் எங்கள் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து உத்தமர் காந்தி விருது, டாக்டர் அப்துல் கலாம் விருது போன்ற விருதுகளும் எங்கள் ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com