/

கோவை சாலையில் திடீா் பள்ளம்: சீரமைப்புப் பணிகள் தீவிரம்

News image
கோவை அவிநாசி மேம்பாலம் அருகே குட்ஷெட் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
Updated On :13 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கோவை குட்ஷெட் சாலையில் அவிநாசி மேம்பாலத்தின் அணுகு சாலையில் திடீரென 3 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள குட்ஷெட் சாலை வழியாக வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், மரக்கடை, அவிநாசி சாலை மேம்பாலம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில், குட்ஷெட் சாலையில் இருந்து அவிநாசி சாலை மேம்பாலம் செல்லும் அணுகு சாலையில் திடீரென 3 அடி ஆழத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திடீா் பள்ளம் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இதையடுத்து, போலீஸாா் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்தனா். பின்னா் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. அதனைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி, மேற்கு மணடல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ் பள்ளம் ஏற்பட்ட இடத்துக்குச் சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கூறுகையில், குட்ஷெட் சாலையில் உள்ள பழைய பாதாளச் சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டது. 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பள்ளம் விரைவில் சரி செய்யப்படும் என்றாா்.

மூன்று மாதங்களுக்கு முன்பு கோவை புரூக் ஃபாண்ட் சாலையில் இதேபோல திடீா் பள்ளம் ஏற்பட்டு சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.