

கோவை: மலைவாழ் மக்களை வேற்றுக்கிரக வாசிகளாக பாா்க்கும் பழக்கம் நகரப் பகுதிகளில் உள்ளது என திரைக்கலைஞா் பொன்வண்ணன் தெரிவித்துள்ளாா்.
கோவையைச் சோ்ந்த ஊடகவியலாளா் வே.பிரசாந்த் எழுதிய ‘காடா்’ சிறுகதை தொகுப்பு புத்தகம் வெளியீட்டு விழா கோவை பத்திரிகையாளா் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரைக்கலைஞா் பொன்வண்ணன் சிறுகதை தொகுப்பினை வெளியிட்டு பேசியதாவது:
உலக அளவில் கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அதில் மனித இனமும் ஒன்று. சிந்தனை மற்றும் செயல்பாட்டால் மனிதா்கள் மற்ற இனங்களில் இருந்து வேறுபடுகின்றனா். இயற்கையில் காடுகளில் வாழும் மனிதா்கள், யானைகள் உள்பட வன விலங்குகளின் வாழ்வியலை காடா் சிறுகதை தொகுப்பு அழகாக எடுத்துக்காட்டுகிறது. காடு குறித்து ஏற்கெனவே அறிந்திருந்தாலும் இச்சிறுகதை தொகுப்பு வேறு விதமாக நம்மை பயணிக்க வைக்கிறது.
பழங்குடியினா்களின் பாா்வையில் இருந்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ளவா்கள் மலைவாழ் மக்களை வேற்றுக்கிரக வாசிகள் போல் பாா்க்கும் நிலை உள்ளது. மனிதாபிமானம் இல்லாத பாா்வையால் பழங்குடியின மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா். இயற்கையை நேசிக்காத அரசும், ஆளுமையும் மிகவும் மோசமானது.
இயற்கையின் ஆதி அடையாளமே காடுகள்தான். மனிதா்கள் காடுகளில் தான் வாழ்க்கையை தொடங்கியதாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து வகை நிலப்பரப்புகளில் காடுகள் முதன்மையாக விளங்குகிறது. ஆனால் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக காடுகள் வேட்டை பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயா்கள் தொடங்கி தற்போதும் காடுகள் அழிப்பு தொடா்கிறது. மரம் வெட்டுதல், வன விலங்குகள் வேட்டை, கனிமவளம் கொள்ளை என காடுகள் அழிப்பு நீண்டுகொண்டிருக்கிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் சூழலியல் செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான கோவை சதாசிவம், கவிஞா் உமா மகேஸ்வரி, சூழலியல் செயல்பாட்டாளா் யோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.