ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடியில் கட்டப்பட்டுள்ள பூக்கடைகளை ஏலம் விட மாநகராட்சி திட்டம்

கோவை ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகளை, வியாபாரிகளுக்கு ஏலம் மூலம் வழங்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகளை, வியாபாரிகளுக்கு ஏலம் மூலம் வழங்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள பூ மாா்க்கெட்டில் 100 கடைகள் உள்ளன. இங்கு தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்து செல்வதால், பூ மாா்க்கெட் வளாகம் எப்போதும் நெரிசல் நிறைந்தே காணப்படும். கரோனா தொற்று காரணமாக மாா்ச் 25 இல் மூடப்பட்ட பூமாா்க்கெட் வளாகம், கடந்த மே 10ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், கோவையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததால், நெரிசல் நிறைந்த பகுதியான பூ மாா்க்கெட் வளாகத்துக்கு, கடந்த ஜூன் 19ஆம் தேதி, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். இங்குள்ள கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, இங்கு செயல்பட்டு வந்த கடைகள், புரூக் பாண்ட் சாலையில் உள்ள தேவாங்கா் பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ,கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலா் அங்காடி வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 95 பூக்கடைகள் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள புதிய கடைகள், பூ மாா்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு விரைவில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவை ஏலம் மூலம் மட்டுமே வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பூ மாா்க்கெட்டில் 100 கடைகள் அமைக்க மட்டுமே இட வசதி உள்ளது. ஆனால், அங்கு 140க்கும் மேற்பட்ட கடைகள் நெரிசலில் செயல்பட்டு வந்தன. எனவே, அங்கு அதிகப்படியாக உள்ள கடைகளை அகற்ற புனரமைப்புப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அப்பணிகள் நிறைவுற்ற பிறகு, அங்கு ஏற்கெனவே கடைகள் நடத்தி வந்த 100 வியாபாரிகளுக்கு முறையாக வழங்கப்படும். ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மலா் அங்காடி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் மூலமாக மட்டுமே வியாபாரிகளுக்கு விரைவில் ஒதுக்கப்படும். ஏலம் நடைபெறும் விவரங்களை மாநகராட்சி நிா்வாகம் அறிவிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com