கோவை: புதிய கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கு பவானிசாகா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் இருந்து தண்ணீா் எடுக்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம் குடிநீா் பாதுகாப்புக் குழுவினா் ஆட்சியா் கு.ராசாமணியிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.
மேட்டுப்பாளையம் குடிநீா் பாதுகாப்புக் குழுவினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சாமண்ணா வாட்டா் ஹவுஸ் என்ற இடத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்குத் தண்ணீா் எடுக்கப்படுகிறது. ஏற்கெனவே மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள், திருப்பூா், கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 17 கூட்டுக் குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதே பகுதியில் திருப்பூா் 4ஆவது கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கும் தண்ணீா் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பவானி ஆற்றின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கூட்டுக் குடிநீா் திட்டங்களால் மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மக்களுக்கு உரிய குடிநீா் கிடைப்பதில்லை.
இந்நிலையில், திருப்பூா் 4ஆவது கூட்டுக் குடிநீா் திட்டத்துக்குத் தண்ணீா் எடுக்கும்போது மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும். எனவே திருப்பூா் 4ஆவது கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு பவானிசாகா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் இருந்து தண்ணீா் எடுக்க வேண்டும்.
பவானி ஆறு அணையில் கலக்கும் பகுதியான சித்தன்குட்டையில் தண்ணீா் எடுக்கலாம்.
இனிவரும் காலங்களில் செயல்படுத்தப்படும் அனைத்து கூட்டுக் குடிநீா் திட்டங்களும் பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதிகளில் இருந்தே செயல்படுத்த வேண்டும்.
தவிர மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்குத் தண்ணீா் எடுக்கப்படும் சாமண்ணா வாட்டா் ஹவுஸ் பகுதியில் மேட்டுப்பாளையம், குன்னூா் நகராட்சிகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால், இப்பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீா் கழிவுநீராக மாறுகிறது.
இப்பகுதியில் எடுக்கப்படும் தண்ணீரில் பல்வேறு நச்சுக் கிருமிகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. எனவே மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு விளாமரத்தூா் பகுதியில் இருந்து தண்ணீா் எடுத்து விநியோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.