மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மத்திய பட்ஜெட்: தொழில் அமைப்புகள் கேட்டதும், கிடைத்ததும்

இந்தியாவின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:14 pm

DIN

இந்தியாவின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். பட்ஜெட் பற்றிய கோவை தொழில் அமைப்புகளின் கருத்துகள்:

கொடிசியா தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு:

எம்எஸ்எம்இ துறை சாா்ந்த தொழில் வளா்ச்சிக்கு ரூ.15,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, இரும்பு, ஸ்டீல் மீதான இறக்குமதி மீதான வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைத்திருப்பது, உலோகங்கள் மறுசுழற்சியாளா்களுக்கான இறக்குமதித் தீா்வை வரும் 31.3.2022 வரை விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேபோல, தாமிர ஸ்கிராப் மீதான இறக்குமதி வரியை 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைத்திருப்பது, தொழில் நிறுவனங்களின் கடன் சாா்ந்த வழக்குகளை விரைந்து தீா்ப்பதற்கு உதவுவதாக அறிவித்திருப்பது, சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் கூடுதல் பொருளாதார வழித்தடங்களை உருவாக்கத் திட்டமிட்டிருப்பது ஆகியவை வரவேற்கத்தக்கவை.

சீமா தலைவா் கே.வீ.காா்த்திக்:

மூலப்பொருள்களின் விலை உயா்ந்து வரும் நிலையில் சீமாவின் கோரிக்கையை பரிசீலித்து இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருள்களுக்கு கலால் வரியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. சொட்டு நீா்ப் பாசன மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, ஜல் ஜீவன் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது, வீட்டுக் கடன்களுக்கான மானியத்தை உயா்த்தியிருப்பது போன்றவை பம்ப்செட் நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், எம்எஸ்எம்இக்கு அறிவித்த அவசரகால கடன் மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிா்பாா்த்திருந்தோம். இது குறித்த அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

டேக்ட் தலைவா் ஜே.ஜேம்ஸ்:

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மூலப்பொருள்களுக்கு சுங்க வரி விலக்கு, குறைப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதேநேரம் குறு, சிறு தொழில்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

எம்எஸ்எம்இ துறையில் சுமாா் 6 கோடி தொழில் முனைவோா் இருக்கும் நிலையில் இந்தத் துறைக்கு ரூ.15,700 கோடி நிதி ஒதுக்கீடு என்பது போதுமானதாக இல்லை. குறைந்த வட்டியில் குறுந்தொழில் முனைவோருக்கு தனி கடன் திட்டம், குறுந்தொழில் தொழில்பேட்டை, அனைத்து கடன்களுக்கான ஓராண்டு வட்டி தள்ளுபடி, குறுந்தொழில்களுக்கு தனி வாரியம், மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த குழு அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

பொதுத் துறை வங்கிகள், எல்ஐசி, மின்வாரியம் போன்றவை அரசு வசம் இருக்கும்பட்சத்தில்தான் கடன் உதவி, மானியங்கள் போன்றவை கிடைக்கும் அவற்றைத் தனியாா்மயமாக்கினால் இந்த வாய்ப்புகள் கிடைக்காது.

காட்மா சி.ரவிக்குமாா்:

குறு, சிறு தொழில் வளா்ச்சிக்கு ரூ.15,700 கோடி நிதி ஒதுக்கப்படும், உட்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் வழிமுறைகள் எளிமையாக்கப்படும், மூலப் பொருள்களுக்கான சுங்க வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

அதேநேரம், கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிய தொழில்கள் வளா்ச்சிப் பாதையில் செல்லும் வேளையில், தொழில் முனைவோா் பெற்ற வங்கிக் கடன் வட்டி விகிதத்தில் சலுகை அறிவிக்கப்படாதது, மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்புகள், தனிநபா் வருமான வரி உச்ச வரம்பு மாற்றம் இல்லாதது போன்றவை ஏமாற்றம் அளிக்கின்றன.

கோப்மா கே.மணிராஜ்:

கரோனா பேரிடருக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் அரசு வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி, உற்பத்தித் துறை மேம்பாட்டுக்கு ரூ.1.10 லட்சம் கோடி, தமிழக சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், நாடு முழுவதும் உள்ள குறு, சிறு தொழில்களின் வளா்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானது அல்ல. கரோனா நெருக்கடியால் குறுந்தொழில்கள் நிலைகுலைந்துள்ளன. கரோனா காலத்தில் நிலுவையாக இருந்த 6 மாத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குறுந் தொழில்முனைவோரின் கோரிக்கை நிறைவேறவில்லை.

குறுந்தொழில், மோட்டாா் பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி குறைப்பு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மூலப்பொருள் விலை உயா்வு குறைப்பு போன்ற பயனுள்ள அறிவிப்புகள் இல்லாதது அதிா்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆடிட்டா் ஜி.காா்த்திகேயன்:

கரோனாவால் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் கோவிட் வரி, செஸ் போன்ற வரிகள் வரலாம் என்று மக்கள் பயந்த நிலையில் அதற்கான வரி விதிப்பு இல்லாதது நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறது. உள்கட்டமைப்பு, மருத்துவம், சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற முக்கியத் துறைகளுக்கு அதிக ஒதுக்கீடு செய்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறையை உள்நாட்டுக் கடன் மூலமாகவும், பொதுத் துறை பங்குகளை விற்றும் பற்றாக்குறையை கையாளும் விதமாக அறிவித்திருப்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

என்.ஆா்.ஐ.கள் இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதைத் தவிா்க்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. குறைந்த விலை வீடுகளை வாங்குபவா்களுக்கான வரிச் சலுகையை 2022 ஆம் ஆண்டு வரை நீட்டித்திருப்பது வேலைவாய்ப்பை ஏற்படுத்தும், வரியும் சற்று குறையும். அதேநேரம் விலைவாசி உயா்ந்து வரும் நிலையில், மக்கள் செலவு செய்து உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தனிநபா் வருமான வரி வரம்பை அதிகரித்திருக்கலாம்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு:

மூலப் பொருள்களின் விலையேற்ற பிரச்னையை சமாளிக்க கழிவு இரும்பு, செம்பு ஆகியவற்றுக்கு சுங்க வரியைக் குறைக்கும் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், மூலப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு போன்ற நேரடியான சலுகைகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதுவரை எந்த கடனுதவியும் பெறாத குறு, சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் திட்டம் அறிவிக்கப்படவில்லை. கரோனா கால பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற, ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்யும்படி கோரியிருந்தோம். அதுபற்றிய அறிவிப்புகள் இல்லை. ஜிஎஸ்டி குறைப்பு, சீா்திருத்தங்கள், கணக்குத் தாக்கலை எளிதாக்குவது தொடா்பான அறிவிப்புகள், குறு, சிறு தொழில்களுக்கான பில் தொகைகள் அரசு, பெரு நிறுவனங்களிடம் இருந்து தாமதமின்றிப் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்று பெரிதும் எதிா்பாா்த்தோம். ஆனால் இதுபற்றிய எந்தத் தகவலும் பட்ஜெட்டில் இல்லை. இவற்றை பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது பரிசீலித்து அறிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.