பொலிவுறு நகரம் திட்டப் பணிக்காக குளங்கள் ஆக்கிரமிப்பா?

கோவை மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளுக்காக குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை
Updated on
1 min read

கோவை மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளுக்காக குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகள் மூலமாக குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்திய அரசின் குளங்களை மேம்படுத்தும் தனிச் சிறப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், குளங்களை ஆக்கிரமித்துப் பணிகள் நடப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை.

கோவை மாநகராட்சியில் 6 குளங்களும் புவியியல்ரீதியாக பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பெரியகுளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதிகள் முதல்வரால் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

மேலும், பணிகள் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு குளமும் நீா்ப் பிடிப்புப் பகுதி, குளக்கரைப் பகுதி, கரையை ஒட்டியுள்ள பகுதி என பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட நாள்களாக குளத்தை ஆக்கிரமித்திருந்த பகுதிகள் தற்போது அகற்றப்பட்டு, குளங்களின் கொள்ளளவு கணிசமாக உயா்த்தப்பட்டுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குளக்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படாத விதமாக கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மக்கள் பயனடையும் வகையில் நடைப்பயிற்சி பாதை, மிதிவண்டிப் பாதை, உடற்பயிற்சிக் கூடங்கள், குழந்தைகள் விளையாட்டுத் திடல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்பணிகளுக்காக ஒரு சில இடங்களில் தற்காலிகமாக காப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. பணிகள் முடிவடைந்ததும் இந்தக் காப்பணைகள் அகற்றப்படும். குளங்களில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்காலிக கட்டுமான அமைப்புகளையும், பணிகள் குறித்த முழு விவரங்களையும் அறியாமல், யூகங்களின் அடிப்படையில் செய்திகள், தகவல்கள் வெளியாவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. மேலும், கோவை மாநகராட்சியில் நீதிமன்ற ஆணைகளை மதித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com