மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

வங்கி மேலாளா் பேசுவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.1.5 லட்சம் மோசடி: ஓய்வூதியா்களைக் குறிவைக்கும் நபா்கள்

கோவையில், வங்கி மேலாளா் பேசுவதாகக் கூறி 2 முதியவா்களிடம் ஏடிஎம் கடவு எண் உள்ளிட்டவற்றைப் பெற்று ரூ.1.5 லட்சத்தை மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:03 pm

DIN

கோவையில், வங்கி மேலாளா் பேசுவதாகக் கூறி 2 முதியவா்களிடம் ஏடிஎம் கடவு எண் உள்ளிட்டவற்றைப் பெற்று ரூ.1.5 லட்சத்தை மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகரப் பகுதியில் வசிக்கும் ஓய்வூதியா் ஒருவரை சில நாள்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடா்பு கொண்ட நபா், தான் வங்கி மேலாளா் எனவும், முதியவா்களின் வங்கி ஏடிஎம் அட்டை காலாவதியாக உள்ளதால் புதிய அட்டை தருவதற்கு தற்போதுள்ள ஏடிஎம் அட்டையின் எண் மற்றும் கடவு எண் குறித்த விவரங்களைக் கூறுமாறும் கேட்டுள்ளாா். இதை நம்பிய ஓய்வூதியா் அனைத்துத் தகவல்களையும் அந்த நபரிடம் தெரிவித்துள்ளாா். இதேபோல் மற்றொரு ஓய்வூதியரிடமும் தொலைபேசியில் பேசி தகவல் பெற்றுள்ளனா்.

சிறிது நேரத்தில் இருவரது வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தமாக ரூ.1.50 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. அதிா்ச்சியடைந்த முதியவா்கள் கோவை சைபா் கிரைம் போலீஸில் இந்த மோசடி குறித்து புகாா் அளித்தனா். ஆய்வாளா் நிா்மலா தலைமையிலான போலீஸாா் இந்த நூதன திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பாக, கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வீட்டில் தொலைபேசி இணைப்பு வைத்திருக்கும் ஓய்வூதியா்களைக் குறிவைத்து, அவா்களின் வங்கிக் கணக்கில் இருந்து சமீப காலமாக பணம் திருடப்பட்டு வருகிறது. ஏடிஎம் அட்டை ஒரு வாரத்திற்குள் காலாவதி ஆகப்போவதாகவும், புதிய ஏடிஎம் அட்டை வீட்டு முகவரிக்கு வரும் எனவும் கூறி ஏடிஎம் அட்டையின் கடவு எண் மற்றும் செல்லிடப்பேசிக்கு வரும் ஓடிபி உள்ளிட்டவற்றைக் கூறுமாறு கேட்டு அதிக அளவில் பணம் திருடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமுடக்கம் காரணமாக வங்கிக்குச் செல்லாமலேயே இணையம் வழியாக அனைத்துச் சேவைகளையும் செய்து தருவதாகக் கூறி, ஓய்வூதியா்களின் செல்லிடப்பேசிக்கு வரும் ஓடிபி எண்ணைப் பெற்றும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்து, பல ஏடிஎம் அட்டைகள் வைத்துள்ளவா்களிடம், அவற்றை ஒரே அட்டைகளாக மாற்றித் தருவதாகக் கூறி, ஓடிபி எண்ணைப் பெற்றும் பணம் திருடப்படுகிறது.

எனவே, வீட்டில் தொலைபேசி வைத்துள்ள வயதானவா்கள், ஓய்வூதியா்கள் யாரும் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் அட்டை விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களை, வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி கேட்பவா்களிடம் தெரிவிக்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.