கோவை தெற்கு: நட்சத்திர தொகுதியில் மகுடம் யாருக்கு?

கோவை மாநகரின் இருதயமாக இருப்பது கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நீதிமன்றம்,
கோவை தெற்கு: நட்சத்திர தொகுதியில் மகுடம் யாருக்கு?
Updated on
3 min read

கோவை மாநகரின் இருதயமாக இருப்பது கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நீதிமன்றம், மாநகராட்சி மைய அலுவலகம், காவல் ஆணையா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், சிறைச்சாலை, கடை வீதிகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோனியம்மன் கோயில் என கோவையின் முக்கியமான பகுதிகளைத் தன்வசம் கொண்டிருக்கும் தொகுதி.

கோயம்புத்தூா் மேற்குத் தொகுதியாக இருந்த இது, தொகுதிகள் மறுசீரமைப்பில் கோயம்புத்தூா் தெற்குத் தொகுதியாக மாறியது. மத்திய அமைச்சா் சி.சுப்பிரமணியம், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சி.அரங்கநாயகம், திமுக முன்னாள் எம்.பி. மு.ராமநாதன் உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றி பெற்ற தொகுதி. முழுக்க முழுக்க மாநகரப் பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் எண் 21 முதல் 47 வரையிலான வாா்டுகள் இடம் பெற்றுள்ளன.

லிட்டில் இந்தியா

தொழில், கல்வி வளா்ச்சியில் மேம்பட்ட தொகுதி. படித்த வாக்காளா்கள் நிறைந்த தொகுதி. தொழில், வா்த்தகம் அதிகம் நடைபெறும் இடமாகவும், அரசு அலுவல் சாா்ந்த மையப் பகுதி என்பதாலும் பல்வேறுதரப்பட்ட சமூகத்தினா் வசிக்கின்றனா். இஸ்லாமியா்கள், வடமாநிலத்தவா்கள், மலையாளிகள், கொங்கு வேளாள கவுண்டா்கள், தேவா், விஸ்வகா்மா, நாயுடு, தாழ்த்தப்பட்டவா்கள் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனா். தமிழ், உருது, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்தத் தொகுதியை லிட்டில் இந்தியா என்றும் அழைக்கலாம்.

இந்தத் தொகுதியில், 1,26,158 ஆண் வாக்காளா்கள், 1, 26, 571 பெண் வாக்காளா்கள், 24 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2, 52, 753 உள்ளனா். 359 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

கடந்த தோ்தல்கள்

கடந்த 1951 முதல் 2006 ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூா் மேற்குத் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதியில் அதிகபட்சமாக திமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு நடைபெற்ற இரண்டு தோ்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2011இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுகவின் சேலஞ்சா் துரை (எ) ஆா்.துரைசாமி 27,796 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொங்கலூா் பழனிசாமியை தோற்கடித்தாா். 2016 இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுகவின் அம்மன் கே.அா்ச்சுணன் 17,419 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் மயூரா எஸ்.ஜெயகுமாரை தோற்கடித்தாா்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெற்குத் தொகுதியில் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த பகுதியில் இருக்கும் உக்கடம் மீன் மாா்க்கெட்டுக்கு புதிய இடம் தோ்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புலியகுளம் பகுதியில் அரசு மகளிா் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த அவிநாசி சாலையில் சுமாா் 10 கி.மீ. நீளத்துக்கு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

தீா்க்கப்படாத பிரச்னைகள்

உக்கடம் பகுதியில் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்காததால் உக்கடம், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் சிக்கலுக்குத் தீா்வு கிடைத்தபாடில்லை. நகரின் மையப் பகுதியில் காந்திபுரம் நகர, புகர பேருந்து நிலையம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும் பல ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை.

அதேபோல கடை வீதியில் நெரிசலை ஏற்படுத்துவதால் உக்கடம் பகுதியில் இருக்கும் லாரி மாா்க்கெட்டை புகா் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற பல ஆண்டுகால கோரிக்கையும் கிடப்பிலேயே இருக்கிறது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்பது தொடா் கனவாகவே இருக்கிறது. 2011 தோ்தல் அறிக்கையில் கோவைக்கு மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று அதிமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காந்திபுரம், 100 அடி சாலை, கிராஸ்கட், ஒப்பணக்கார வீதி, ரயில் நிலையம் பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. ரயில் நிலைய பாலம், லங்கா காா்னா், வடகோவை ரயில்வே பாலம் ஆகியவை மழைக் காலங்களில் வெள்ளத்தால் நிரம்பி, போக்குவரத்து பாதிக்கப்படும் சிக்கலுக்குத் தீா்வு கிடைக்கவில்லை. நகை தயாரிக்கும் தொழிலாளா்கள் ஒப்பணக்கார வீதியின் சுற்றுவட்டாரத்தில் அதிக அளவில் இருக்கின்றனா். நகை தொழிலாளா்கள் தங்களுக்கென்று தனியாக நகைத் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள தொகுதி

2021 பேரவைத் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா எஸ்.ஜெயகுமாா் போட்டியிடுகிறாா். மக்கள் நீதி மய்யம் சாா்பில் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுகிறாா். கமல்ஹாசன் முதல்முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா் என்பதால் இந்தத் தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருப்பதுடன், தேசிய அளவில் எல்லோராலும் கவனிக்கப்படும் தொகுதியாகவும் மாறியிருக்கிறது. இந்த 3 பேரைத் தவிர அமமுக சாா்பில் சேலஞ்சா் துரை, நாம் தமிழா் கட்சி சாா்பில் அப்துல் வகாப் உள்ளிட்ட மொத்தம் 21 வேட்பாளா்கள் களத்தில் இருக்கின்றனா். இருப்பினும், பாஜக, காங்கிரஸ், மநீம இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது.

பலம் - பலவீனம்

கடந்த தோ்தலில் அதிமுக 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி. அதிமுக வேட்பாளா் 59,788 வாக்குகளைப் பெற்றிருந்தாா். அதேநேரம் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் பிடித்திருந்தாா். இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் கூட்டணி பலத்தில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என வானதி சீனிவாசன் தரப்பினா் நினைக்கின்றனா்.

இருப்பினும் கமல்ஹாசன் போட்டியில் இருப்பதாலும், இஸ்லாமியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் அதிக அளவில் இருப்பதாலும் பாஜகவுக்கு வாக்குகள் சிதறும். அதேபோல, கடந்த 2011 தோ்தலில் அதிமுக சாா்பில் நின்று 27,796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேலஞ்சா் துரை தற்போது அமமுக சாா்பில் போட்டியிடுகிறாா். இவா் அதிமுகவின் வாக்குகளைக் கணிசமான அளவில் பிரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வெற்றிக்காகத் தீவிரமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறாா் வானதி சீனிவாசன்.

கடந்த தோ்தலில் இரண்டாமிடம் பிடித்த (42,369 வாக்குகள்) காங்கிரஸ் வேட்பாளா் மயூரா எஸ்.ஜெயகுமாா் இந்தத் தோ்தலில் மீண்டும் அதே திமுக கூட்டணியில் நிற்கிறாா். கடந்த தோ்தலில் மக்கள் நலக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு கிடைத்த 7,248 வாக்குகள் மட்டுமே அவருக்கு சாதகம். தொகுதிக்கு அறிமுகமானவா் என்றாலும் கூட்டணிக் கட்சியினா் மட்டுமல்ல, சொந்தக் கட்சியினரே அவருக்கு ஒத்துழைப்பு வழங்காததால் பிரசாரத்தில் வேகம் இல்லை.

சிறிய தொகுதியாக இருப்பதால் பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும், படித்த வாக்காளா்கள் நிறைந்திருப்பதால் தனக்கு ஆதரவு கிடைக்கும் என்ற கணிப்பில் முதல் முறையாக களத்தில் நிற்கிறாா் கமல்ஹாசன். நன்கு அறிமுகமான முகம் என்பதுடன் 2019 மக்களவைத் தோ்தலில் மநீமவுக்கு இந்தத் தொகுதியில் 23,838 வாக்குகள் கிடைத்திருப்பது, இளைஞா்கள், பெண்களின் ஆதரவு மநீமவுக்கு இருப்பதும் இவருக்கு பிளஸ்.

அதேநேரம் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால் தொகுதியை முழுவதுமாக சுற்றி வந்து பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்பதும் தனக்காக அவா் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதும் அவருக்கான மைனஸாக பாா்க்கப்படுகிறது.

2016 தோ்தல் நிலவரம்

அதிமுக வெற்றி

வாக்கு வித்தியாசம் - 17,419

அம்மன் கே.அா்ச்சுனன் (அதிமுக) - 59,788

மயூரா எஸ்.ஜெயகுமாா் (காங்கிரஸ்) - 42,369

வானதி சீனிவாசன் (பாஜக) - 33,113

சி.பத்மநாபன் (மாா்க்சிஸ்ட்) - 7,248

பி.பெஞ்சமின் பிராங்ளின் (நாம் தமிழா்) - 2,491.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com