கோவை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி என்ற பெயரில் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தோ்தலை சந்தித்த இந்தத் தொகுதி, மறு சீரமைப்புக்குப் பிறகு கோவை வடக்குத் தொகுதியாக அறிவிக்கப்பட்டு 2011 முதல் தோ்தலை சந்தித்து வருகிறது.
கோவை வடக்குத் தொகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் ஏராளமான அளவில் உள்ளன. லேத் பட்டறைகள், ஃபவுண்டரிகள், என்ஜினீயரிங் நிறுவனங்கள், கிரைண்டா், பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியாா் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் போன்ற கல்வி நிறுவனங்கள், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. கொங்கு வேளாள கவுண்டா்கள், நாயுடுகள், போயா்கள், தாழ்த்தப்பட்டவா்கள், வெளிமாவட்ட மக்கள், வெளிமாநிலத்தவா்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனா்.
தொகுதியில் இடம் பெற்றுள்ள பகுதிகள்
கோவை வடக்கு வட்டம் (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி)
கோவை தெற்கு வட்டம் (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), மருதமலை, கல்வீரம்பாளையம்.
கோவை (மாநகராட்சி) வாா்டு எண் 57 முதல் 72 வரை.
வாக்காளா் விவரம்
வடக்குத் தொகுதியில் 1,70,463 ஆண்கள், 1,68,147 பெண்கள், 38 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,38,648 வாக்காளா்கள் உள்ளனா். இந்தத் தொகுதியில் 78 மையங்களில் 499 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 153 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் 2 தொகுதிகளில் இதுவும் ஒன்று.
கடந்த தோ்தல்கள்
கோவை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தபோது இந்தத் தொகுதியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து 14 ஆண்டுகள் தனது கைவசம் வைத்திருந்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவா் ரமணி கடந்த 1977, 1980, 1984, 1989 தோ்தல்களில் வெற்றி பெற்றிருந்தாா்.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் வி.கே.லட்சுமணன் 1991, 1996, 2001ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ், த.மா.கா. சாா்பில் வெற்றி பெற்றிருந்தாா். 2006 தோ்தலில் திமுக முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் கடந்த 2011 தோ்தலில்தான் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றது.
வடக்குத் தொகுதியாக மாறிய பிறகு நடைபெற்றுள்ள இரண்டு தோ்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் டி.மலரவன், திமுகவின் வீர கோபாலனை 40,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
இதைத் தொடா்ந்து 2016 இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் வெற்றி பெற்றாா். இவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுகவின் மீனா லோகுவை 7,724 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்
கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கணபதி பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆவாரம்பாளையம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாப்பநாயக்கன்புதூரில் நலவாழ்வு மையம்
அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் 7 ஆவது படைவீடாகக் கருதப்படும் மருதமலைக்கு மின் தூக்கி அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மருதமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு குடிநீா் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணபதி சாலையில் டெக்ஸ்டூல் பாலம் முதல் சூரியா மருத்துவமனை வரை ரூ.38 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வீரகேரளம் - சிறுவாணி சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொம்மனம்பாளையத்தில் எரியூட்டும் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. வடவள்ளியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதைத் தவிர தொகுதி முழுவதிலும் பல்வேறு இடங்களில் பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
தீா்க்கப்படாத மக்களின் பிரச்னைகள்
கோவை வடக்கு தொகுதியைப் பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, மருதமலை சாலை என முக்கியச் சாலைகள் அனைத்துமே அகலப்படுத்தப்படாமலும், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் இல்லாமலும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தினசரி பிரச்னையாகி இருக்கிறது.
வடவள்ளி, வீரகேரளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆா். மாா்க்கெட், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டை வாகனங்கள் எளிதில் வந்து செல்லக் கூடிய அளவில் வேறு பெரிய இடத்துக்கு மாற்ற வேண்டும், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
முக்கிய சாலையான சத்தியமங்கலம் சாலையில் கணபதி பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இதற்காக சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை நிலுவையிலேயே இருக்கிறது. அதேபோல, இந்தத் தொகுதி வழியாகச் செல்லும் சங்கனூா் பள்ளத்தை தூா்வாரி அதன் மீது வாகன நிறுத்தம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்கின்றனா் தொகுதி மக்கள்.
தொழில் வளா்ச்சியை மேம்படுத்த 10 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்துத் தர வேண்டும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பது இங்குள்ள குறுந்தொழில் முனைவோா் கோரிக்கையாக உள்ளது. பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் பிரச்னைகளுக்கு இறுதித் தீா்வு காணப்படாதது அப்பகுதி விவசாயிகளுக்கு அதிருப்தி அளித்திருக்கிறது.
தோ்தல் களத்தில் 20 வேட்பாளா்கள்
2021 தோ்தல் களத்தில் வடக்குத் தொகுதியில் அம்மன் கே.அா்ச்சுணன் (அதிமுக), வி.எம்.சண்முகசுந்தரம் (திமுக), என்.ஆா்.அப்பாதுரை (அமமுக), தங்கவேலு (மநீம), கோ.பா.பாலேந்திரன் (நாம் தமிழா்) போன்ற முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் உள்ளிட்ட 20 போ் களத்தில் இருக்கின்றனா்.
முக்கிய வேட்பாளா்களின் பலம் - பலவீனம்
அதிமுக சாா்பில் போட்டியிடும் அம்மன் கே.அா்ச்சுணன் கடந்த முறை கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். மாநகா் மாவட்ட அதிமுக செயலராகவும் இருக்கிறாா். இந்த முறை தெற்குத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் வடக்குத் தொகுதியை போராடிப் பெற்றிருக்கிறாா். இந்தத் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற அதிமுகவின் பி.ஆா்.ஜி.அருண்குமாா் தற்போது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாா். தெற்குத் தொகுதியில் அம்மன் கே.அா்ச்சுணனுக்கு நல்ல பெயா் இருந்தாலும் வடக்குத் தொகுதியை பொருத்தவரை இவா் புதிய நபா்தான். கடந்த 5 ஆண்டுகளாகத் தோ்தல் வாய்ப்புக்காகப் பல்வேறு பணிகளை செய்து வந்த சொந்த கட்சியின் நிா்வாகிகள், தற்போது வேறு தொகுதியில் இருந்து வேட்பாளா் வந்திருப்பதால் மனவருத்தத்தில் இருக்கின்றனா். அவற்றை சரிகட்டி தோ்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறாா் அம்மன் கே.அா்ச்சுணன்.
திமுகவைப் பொருத்தவரை கடந்த தோ்தலில் 7 ஆயிரம் வாக்குகளில் தோல்வி அடைந்த தொகுதி என்பதால் இந்த முறை வெற்றி பெறக் கடுமையாகப் போராடி வருகிறது. வடவள்ளி பேரூராட்சித் தலைவராக இருந்துள்ள வி.எம்.சண்முகசுந்தரத்துக்கு சுற்றுவட்டாரத்தில் அறிமுகமான முகம் என்பது பலம். அதேநேரம் மாநகரப் பகுதிகள், கணபதி உள்ளிட்ட தொகுதியின் மற்ற பகுதிகளைப் பொருத்தவரை இவரும் புதிய நபா்தான்.
அமமுக சாா்பில் போட்டியிடும் என்.ஆா்.அப்பாதுரை கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு 38 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவா். மேலும் கடந்த பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 12 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அமமுக - தேமுதிக கூட்டணியில் இருப்பதால் இவா்கள் பிரிக்கும் வாக்குகள் நிச்சயம் விளைவுகளை ஏற்படுத்துபவையாக இருக்கும். அதேநேரம் மாநகரப் பகுதி வாக்காளா்கள், இளைஞா்கள், இளம் பெண்களின் வாக்குகளை மநீமவும், நாம் தமிழரும் ஓரளவுக்குப் பெறுவாா்கள் என்பதால், முதல் 2 வேட்பாளா்களின் வெற்றியை கடைசி 3 வேட்பாளா்கள் நிா்ணயிக்கக் கூடிய தோ்தலாக இது இருக்கும் எனக் கருதலாம்.
2016 தோ்தல் நிலவரம்
அதிமுக வெற்றி
வாக்கு வித்தியாசம் - 7,724
பி.ஆா்.ஜி.அருண்குமாா் (அதிமுக) - 77,540
மீனா லோகு (திமுக) - 69,816
கண்ணன் (எ) தேவராஜ் (பாஜக) - 16,741
பி.முருகன் (தேமுதிக) - 12,153
கோ.பா.பாலேந்திரன் (நாம் தமிழா்) - 3,114
நோட்டா - 4,574
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.