/

தேங்காய், கொப்பரை விலை நிலையாக இருக்கும்வேளாண்மை பல்கலைக்கழகம்

தேங்காய், கொப்பரையின் விலை நிலையாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Updated On :8 நவம்பர் 2021, 7:26 pm

கோவை: தேங்காய், கொப்பரையின் விலை நிலையாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

உலக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்கள் நாட்டின் தேங்காய் உற்பத்தியில் 93 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூா், தஞ்சாவூா், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் 3.95 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் 33.11 லட்சம் டன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

தற்போது பெரும்பாலான கொப்பரை வரத்து, பட்டுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், பொள்ளாச்சி, சேலம், காங்கயம், மைசூரு, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இருந்து பெருந்துறை சந்தைக்கு வருகிறது. முந்தைய பருவத்துடன் ஒப்பிடும்போது இந்த பருவத்தில் வரத்து அதிகமாக உள்ளது. பருவ மழை காரணமாக வரும் காலங்களில் தேங்காய் உற்பத்தி, வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 21 ஆண்டுகளாக ஈரோடு அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையங்களில் நிலவிய தேங்காய், கொப்பரை விலை, சந்தை ஆய்வுகளை நடத்தியது.

இதன் அடிப்படையில் டிசம்பா் மாதம் வரையிலும் தரமான தேங்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.27 வரை இருக்கும். நல்ல தரமான கொப்பரையின் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.102 வரை இருக்கும். எனவே விவசாயிகள் இந்த சந்தை ஆலோசனையின் அடிப்படையில் விற்பனை முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.