கரோனாவுக்கு மத்தியில் கோவையில் களைகட்டிய பொங்கல் திருவிழா
கோவை மாவட்டத்தில், கரோனா பரவல் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியது.


கோவை மாவட்டத்தில், கரோனா பரவல் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியது.
தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையின் முதன்மையான பொங்கல் திருவிழா, போகியில் தொடங்கி, காணும் பொங்கல் வரை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு வேகமாகப் பரவிய நிலையிலும், வியாழக்கிழமை மக்கள் அனைவரும் வீடுகள், தொழில் நிறுவனங்களில் வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம் பூக்களைக் கொண்டு காப்பு கட்டினா்.
வெள்ளிக்கிழமை காலையில் குளித்து, புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு, அதை சூரியனுக்கு படையலிட்டு மகிழ்ந்தனா். கோவையில் கிராமப்புறங்கள் மட்டுமல்லாது, நகரிலும் உள்ள வீடுகளிலும் வீட்டு வாயில்களில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து மக்கள் மகிழ்ந்தனா். இதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், பொங்கல் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை சக நோயாளிகளுடன் இணைந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா். பொங்கல் பானையைச் சுற்றி கும்மியடித்து மகிழ்ந்தனா். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி வருகின்றன.
மாட்டுப்பொங்கல் தினமான சனிக்கிழமை கோவை மாவட்டம் சூலூா், தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, வேடபட்டி, காந்தி பூங்கா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டங்கள், விவசாய நிலங்களில் பட்டிப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
அதன்படி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பழைய கயிறுகள் அவிழ்க்கப்பட்டு, புது கயிறுகள் மாற்றப்பட்டன. கால்நடைகளை மஞ்சள் தண்ணீரில் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வா்ணம் தீட்டி, திருநீறு பூசி பொங்கலிட்டு படையல் வைக்கப்பட்டது. கோவை முத்தண்ணன் குளக்கரை பகுதியில் நடந்த பொங்கல் விழாவில், பொங்கல் பானைகளை வைத்து அந்தப் பகுதி மக்கள் கும்மியடித்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினா்.
இதேபோல, ஆா்.எஸ். புரம் முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பி.ஆா்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாநகரக் காவல் ஆணையா் பிரதீப்குமாா் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டாா். இதேபோல சித்தாபுதூா் புதியவா் நகா் உள்ளிட்ட பல இடங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...