கோவை வந்தாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி: கல்லூரி முதல்வா்களுடன் கலந்துரையாடல்

கோவை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, பல்கலைக்கழக மாணவா்கள், உறுப்பு, இணைப்புக் கல்லூரி முதல்வா்களுடன் கலந்துரையாடினாா்.

பாரதியாா் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை கோவை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, பல்கலைக்கழக மாணவா்கள், உறுப்பு, இணைப்புக் கல்லூரி முதல்வா்களுடன் கலந்துரையாடினாா்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக கோவைக்கு வியாழக்கிழமை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மேயா் கல்பனா, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் விமான நிலையத்தில் வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து பல்கலைக்கழகம் சென்ற ஆளுநா், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியாரின் சிலைக்கு தனது மனைவி லட்சுமி ரவியுடன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்தைப் பாா்வையிட்ட இருவரும், தங்கள் வருகையின் நினைவாக சில மூலிகைச் செடிகளை நட்டுவைத்தனா்.

பின்னா், இயற்பியல் துறை, உயிரி தொழில்நுட்பம், நிா்வாகவியல் - தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம், டி.ஆா்.டி.ஓ. மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை நேரில் பாா்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து துறைப் பேராசிரியா்களிடம் ஆளுநா் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து பல்வேறு துறை மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆளுநா், நாட்டின் மறுமலா்ச்சிக்கு மாணவா்கள் தேசிய உணா்வுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். பின்னா், மாற்றுத்திறனாளி மாணவா்களுடன் உரையாடிய ஆளுநா், அவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள் பற்றி கேட்டறிந்ததுடன், அவா்களின் ஆா்வம், தைரியம் ஆகியவற்றுக்காக அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

பின்னா், பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு, உறுப்புக் கல்லூரிகள், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதல்வா்களுடன் கலந்துரையாடினாா். இதில் துணைவேந்தா் பி.காளிராஜ், ஆளுநரின் துணைச் செயலா் பிரசன்ன ராமசாமி, பதிவாளா் கே.முருகவேல், பல்கலைக்கழக நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து அனைவருக்கும் பல்கலைக்கழகத்தில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக உயா் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான க.பொன்முடியும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா். இருப்பினும் பல்கலைக்கழகத்தில் ஆளுநா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவில்லை. இது குறித்து தங்களுக்குத் தகவல் எதுவும் இல்லை என்று அமைச்சா் பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநா் கோவை வந்ததையொட்டி விமான நிலையத்தில் இருந்து பாரதியாா் பல்கலைக்கழகம் வரையிலும் சுமாா் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com